அறுவடைக்கு 4வாரமிருக்கிறது:மானிய பசளையோ கொடுப்பனவோ கிடைக்கவில்லை!பயிர்அழிவதற்கு முன் வழங்குங்கள் ஜனாதிபதியிடம் கொக்கட்டிச்சோலை விவசாயிகள்மனு!

அறுவடைக்கு இன்னும் ஆக நான்கு வாரங்கள் இருக்கின்றன. ஆனால் எமக்கு வழங்கப்படவேண்டிய மானிய பசளையோ மானிய பசளைக்கான கொடுப்பனவோ இன்னும் வழங்கப்படவில்லை. எமது ஜீவாதாரமான பயிர் அழிந்துநாசமாகும் முன்னர் இவற்றை வழங்குமாறு வேண்டுகின்றோம்.
 
இவ்வாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிடம் கொக்கட்டிச்சோலை கமநலப்பிரிவுக்குட்பட்ட கிளாக்கொடிச்சேனை கமநலஅமைப்பு அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது.
 
குறித்த அமைப்பின் தலைவர் சிவஞானம் அகிலேஸ்வரன் பொதுச்செயலாளர் வேலாப்போடி கணேசமூர்த்தி ஆகியோர் ஒப்பமிட்டு இம்மகஜரை அனுப்பியுள்ளனர். பிரதிகளை விவசாயஅமைச்சர் கிழக்கு ஆளுநர் தொடக்கம் பாராளுமன்றஉறுப்பினர்கள்வரை அனுப்பப்பட்டுள்ளது.
 
அதுதொடர்பாக தெரிவிக்கப்படுவதாவது:
எமது கண்டத்தில் சுமார் நூறு விவசாயிகளுக்கு இன்னும் பிரஸ்தாப மானிய பொட்டாசியம் குளோரைட் பசளையோ, பசளை மானியமோ இன்னும் கிடைக்கவில்லை. இதனால் உரிய பசளையின்றி ,பயிர்கள் மஞ்சள்நிறமாகி வீரியம் குறைந்துவருகிறது.அப்படியேவிட்டால் பயிர் அழிந்துபோகும்.
உரிய அதிகாரிகளிடம்கேட்டால் ‘வந்தால் தருவோம்’ என கைவிரிக்கிறார்கள்.
இன்னும் நான்கு வாரங்களில் பயிர்அறுவடை செய்யப்படும் இன்றைய நிலையில் உடனடியாக பசளையையும் மானியத்தையும் வழங்கஆவனசெய்யவேண்டும்.
 
மட்டு.மாவட்ட ஆணையாளரின் கருத்து:
இதுதொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட கமநலஅபிவிருத்தி உதவி ஆணையாளர் பி.ஜெகநாத்துடன் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் பின்வருமாறு பதிலளித்தார்.
 
இந்தப்பிரச்சினை கொக்கட்டிச்சோலைக்கு மாத்திரமல்ல முழு மட்டு.மாவட்டத்திலும் உள்ளது. மாவட்டத்தில்  இன்னும் சுமார் 3ஆயிரம் பேருக்கு மானியப்பசளைக்கான கொடுப்பனவு வழங்கப்படவேண்டும்.விரைவில் அது வரும். வந்ததும் குறித்த விவசாயிகளுக்கு உடனடியாக வழங்குவோம்.
 
இதேவேளை பொட்டாசியம் குளோரைட்(Kcl) பசளை நாட்டிற்கு 48ஆயிரம் மெற்றிக்தொன் தேவை. ஆனால் வந்ததோ 30ஆயிரம் மெற்றிக்தொன். ஆக 18ஆயிரம் மெற்றிக்தொன் தேவையாகிறது. எனவே இப்பசளைக்கான தட்டுப்பாடு என்பது மட்டக்களப்பிற்கு மட்டுமல்ல முழு நாட்டிற்குமுரியது. எம்.ஓபி(MOP) பசளைக்கும் பலத்த தட்டுப்பாடு நிலவுகிறது. எமக்கு பசளை கிடைத்தால் வழங்குவோம். என்றார்.

Related posts