மட்டக்களப்பு மாவட்;டத்தில் பட்டிப்பளை,களுவாஞ்சிகுடி,போரதீவுப்பற்று ஆகிய சபைகளுக்கு தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் சார்பில் வழங்கப்பட்டுள்ள ஆதரவினை விலக்கிக்கொள்வதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப.தலைவரும் போரதீவுப்பற்று பிரதேசசபையின் உறுப்பினருமான சு.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
நேற்று மாலை திருப்பழுகாமத்தில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக்கூட்டத்திலேயே இந்த அறிவிப்பினை அவர் வெளியிட்டார்.
போரதீவுப்பற்று பிரதேசசபை,பட்டிப்பளை பிரதேசசபை,களுவாஞ்சிகுடி பிரதேசசபைகள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையில் ஆட்சியமைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலா ஒரு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துவந்தனர்.
இந்த நிலையில் குறித்த ஆதரவுகளை தாம் விலக்கிக்கொள்வதாகவும் எதிர்வரும் பிரதேசசபை அமர்வில் எதிர்த்தரப்பில் அமரவுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
தமது ஆதரவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைத்துள்ளபோதிலும் மக்கள் நலன் கருதி செயற்படாமல் குறித்த பிரதேசசபைகள் தமது சொந்த நலன்கொண்டே செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தாங்கள் ஆதரவு வழங்குகின்றபோதிலும் தமது கோரிக்கைகள் தொடர்ச்சியாக தவிசாளர்களினால் நிராகரிக்கப்படுவதாகவும் எந்தவிதமான அபிவிருத்தி திட்டங்களும் தமக்கான வட்டாரங்களுக்கு மேற்கொள்ளப்படுவதில்லையெனவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்காக ஆதரவினை விலக்கி எதிர்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தினை இல்லாமல்செய்யப்போவதாகவும் அவர் இதன்போது சூளுரைத்தார்.