மின்தடை நேரத்தில் ஆயுதத்துடன் வந்த சீருடையினர், தன்னை விசாரிப்பதாக கூறி விரட்டி உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
இவ்வாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிடம் கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சாமுவேல் சந்திரசேகரம் ராஜன் முறைப்பாடு தெரிவித்துள்ளார்..
கல்முனை மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் ஏ.சி. அப்துல் அசீஸ் இடம் அவரது முறைப்பாட்டை நேற்று(6) திங்கட்கிழமை கையளித்தார்.
அவரது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..
கடந்த 2 ஆம் திகதி இரவு மின்தடை நேரம் பெரிய நீலாவணையிலுள்ள எனது வீட்டுக்கு வந்த ஆயுதம் தரித்த நான்கு இராணுவத்தினரும் தங்களை கொழும்பு புலனாய்வுப் பிரிவினர் என்று அடையாளப்படுத்திய இருவரும் விசாரிக்க வந்ததாக கூறினர்.
கொழும்பிலிருந்து வந்த புலனாய்வுப் பிரிவினர் என்பதால் அவர்களிடம் அடையாள அட்டையை கேட்டேன்.
ஆனால் அவர்கள் தர மறுத்தனர் .
நான் கல்முனையில் உண்ணாவிரதமிருந்தமை தொடக்கம் கடந்த மாதம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வரை நான் சம்பந்தப்பட்ட விடயங்களில் என்னை துருவித்துருவி விசாரித்தனர்.
இறுதியில் வெளியில் நடமாடக் கூடாது என்று அச்சுறுத்தியதோடு எனக்கும் மனைவி பிள்ளை மற்றும் மருமகனுக்கும் பயமுறுத்தி அச்சுறுத்தல் விடுத்துச் சென்றுள்ளனர் .
இதற்கு முன்னும், 2018ஆம் ஆண்டு உள்ளுராட்சித் தேர்தலின் போதும், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போதும் 2020ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போதும் இனந்தெரியாத ஆயுத குழுக்கள் போலீசார் புலனாய்வுக் குழுவினர் என தொடர்ச்சியாக அடுத்தடுத்து வந்து என்னை விரட்டினர்.
தற்போது மீண்டும் இந்த அச்சுறுத்தலை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் ,மனித உரிமையுடன் சுதந்திரமாக வாழமுடியாத துப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. எனக்கு வாக்களித்த மக்களுக்கு உதவ முடியாத நிலையில் உள்ளேன்.சமுகசேவைசெய்ய தடை ஏற்பட்டுள்ளது.உளவியல் ரீதியான தாக்கம் அதிகமாக உள்ளது.குடும்பமும் அச்சத்தில் உள்ளனர்.
எனது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் பயபீதியுடன் நடைப்பிணமாக குடும்பத்துடன் காலம் கடத்திவருகிறேன்.
இது தொடர்பாக எமது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலைஅரசனிடமும் முறையிட்டுள்ளேன்.
இவர்களை அடையாளம் கண்டு எனக்கு நீதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ,மாநகர சபை உறுப்பினர் சாமுவேல் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்திருக்கின்றார்.