எவ்வளவுதான் கல்வித்துறைக்கு பல மூலதனங்கள் ஈடுபடுத்தப்பட்டாலும் நாங்கள் கல்வியில் நாம் பின்தங்கியுள்ளோம். கல்வியில் கிழக்கு மாகாணம் 8ஆவது இடத்திலும், நமது மாவட்டத்தைப் பொறுத்தவரையிலும் 24ஆவது மாவட்டமாகவும் மட்டக்களப்பு மாவட்டம் இருந்த கொண்டிருக்கின்றது.இதனை ஒவ்வொருவரும் உணர்ந்து செயற்பட வேண்டும்.பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் மீது உரிய கவனம் செலுத்தி கற்றலில் ஊக்கப்படுத்த வேண்டும் என, மட்டக்களப்பு அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.
செட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலயத்தினால் நடாத்தப்பட்ட வருடாந்த புலமைப் பரிசில்கள் வழங்குதலும், கௌரவிப்பு நிகழ்வும் மேற்படி ஆலய முன்றலில் இன்று (27.5.2018) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்:-
ஆலயங்கள் வித்தியாலயங்களாகவும், சமூகசேவை மையங்களாகவும் மாறவேண்டிய தருணம் இதுவாகும். ஆரம்ப காலத்திலிருந்து எமது ஆலயங்கள், கலை கலாசாரங்கள், சமயம், மற்றும் கல்வியையும் வளர்ப்பத்தில் ஈடுபட்டு வந்திருக்கின்றன. இடைக்காலத்தில் ஏற்பட்ட தொய்வுகளின் காரணமாக ஆலயங்கள் இவ்வாறான விடையங்களிலிருந்து வேறொரு பக்கத்தில் சென்று கொண்டிருந்தன. ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறு தற்போது பல ஆலயங்களில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படுகின்ற நிலையை தற்போது அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியுள்ளது.
சமூகத்துக்கு முதலீடாக வருகின்றவர்கள் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவானவர்கள்.சமூகத்துக்கு சுமையாக வருகின்றவர்கள் ஓரிரு புள்ளிகள் வித்தியாசத்தில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்படாமல் விடுபடுபவர்கள். இந்நிலையில் அவ்வாறான மாணவர்கள் தொடர்பிலும் நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தொழிற்பயிற்சி மையங்கள் உருவாக்கப்படல் வேண்டும். அவற்றினூடாக மாணவர்களுக்கு பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கல்வியில் பின்தங்கி இருப்பதற்கு வறுமை ஒரு காரணமாக இருக்கின்றது. வறுமை என்று பார்க்கின்ற போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உண்மையில் வறுமைதானா? என்பதையும் சிந்த்திக்க வேண்டியுள்ளது.
இலங்கையில் மதுபானத்துக்கு அதிகளவு செலவு செய்கின்ற மாவட்டமாக நமது மாவட்டம் உள்ளது. கார், மோட்டார் சைக்கிள் போன்றவற்றுக்கும் அதிகளவு இந்த மாவட்டத்திலேயே செலவு செய்யப்படுகின்றது. ஆடைகளுக்கு அதிகளவு செலவுகளையும், ஆலயங்களில் வீண் கழியாட்டங்களுக்கு அதிக செலவுகளை மேற்கொள்வதும் இம்மாவட்டத்தில் இருக்கின்றது.
எமது பாரம்பரிய கலாசாரங்களுக்கூடாக மிகப்பரிய பொருளாதாரத்தை நாம் இழந்து கொண்டிருக்கின்றோம். இந்த நிதி வேறொருவருக்குத்தான் போய் சென்றடைகின்றது. எமது சமூகத்தின் இனப்பரம்பலிலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
மக்களிடையே சேமிப்பு பழக்கங்களும் குறைவடைந்துள்ளன. சேமிப்பு குறைந்தால் முதலீடு குறையும்.முதலீடு குறைந்தால் உற்பத்திகுறையும்.உற்பத்தி குறைந்தல் வருமானம் குறையும். எனவே மீண்டும் நாம் வறுமைக்குள் தள்ளப்படுவோம். எனவே முறைசாராத வங்கியாக இருந்தாலும் பரவாயில்லை புத்திஜீவிகள் பெரியவர்கள் அனைவரும் சிந்தித்து ஊருக்கு ஒரு வங்கியை ஆரம்பிக்க வேண்டும்.
எமது சமூகத்தில் இருக்கின்ற ஆன்மீக நெறி குறைந்து கொண்டு செல்வதையும் அவதானிக்க முடிகின்றது. ஆனால் இப்பகுதியிலுள்ள மக்கள் மிகுந்த ஆன்மீக ஈடுபாட்டுடன் செயற்படுவதையும் அவதானிக்க முடிகின்றது என்று தெரிவித்தார்.