நாட்டில் இனவாதமற்ற, ஆளுமைமிக்க சிறந்த எதிர்கால தலைவராக அமைச்சர் சஜித் பிரமதாஸ காணப்படுகின்றார் எனவும் அவரின் கரங்களை நாம் பலப்படுத்தி, நாட்டின் தலைமைத்துவத்தை ஒப்படைக்க வேண்டுமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் புகழாரம் சூட்டினார்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உப அலுவலகம், கல்முனை பிராந்திய முகாமையாளர் ஏ.எம்.இப்ராஹிம் தலைமையில், அம்பாறையில் (07) திறந்து வைக்கப்பட்டது.
இந்த அலுவலகம், திருக்கோவில், பொத்துவில், ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள மக்கள், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் சேவைகளை இலகுவாகப் பெற்றுக் கொள்ளும் நோக்கில், திருக்கோவில் 04, பொத்துவில் பிரதான வீதியில் பழைய முதியோர் கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, கோடீஸ்வரன் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், அமைச்சர் சஜீத், எங்களுடன் மிக நெருங்கிய உறவை வைத்துள்ளதுடன், நாங்கள் அவரிடம் கேட்கின்ற விடயங்ளை இல்லையென்று சொல்லாமல் செய்து தருகின்ற ஒரு சிறந்த இனவாதமற்ற அமைச்சராக இருக்கின்றார் என்றார்.
2025ஆம் ஆண்டு காலப் பகுதியில் இப்பிரதேசத்தில் வீடுகள் இல்லாமல் யாரும் இருக்க முடியாது என நம்பிக்கை தெரிவித்த அவர், அமைச்சர் தனது பணிகளைத் திருக்கோவில் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றார் எனவும் தெரிவித்தார்.