இந்தியன் வீட்டுத்திட்டத்தினை மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைப்பது தொடர்பாக இந்தியாவில் இருந்து வருகைதந்த உயர் மட்ட குழுவினர் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் கலந்துரையாடினர்.
அரசாங்க அதிபர் உரையாற்றுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் தலைமை தாங்குகின்ற குடும்பங்களுக்கு இவ்வாறான உதவித்திட்டம் அவசியம் எனவும் இங்கு விவசாயத்தினையும், மீன்பிடியினையும் நம்பி வாழ்கின்ற குடும்பங்கள் தான் அதிகமாக உள்ளனர் எனவும் இத்திட்டத்துடன் இணைந்து மாவட்டத்தில் இன்னும் (18000) பதினெட்டாயிரம் மலசல கூடங்கள் தேவைப்படுவதாகவும் கூறினார்.
இக் கூட்டத்தின் போது மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு தங்களினால் முன்னெடுக்கப்பட இருக்கின்ற (20 000) இருபதாயிரம் வீட்டுத்திட்டத்தினையும் இரண்டு ஆண்டுகளுக்குள் முடித்துத் தருவதாகவும இது தொடர்பான மக்களின் எண்ணங்கள் தொடர்பாகவும் ஆராய்வதற்கு ஆர்வம் காட்டிய இந்திய குழுவினர் கள விஜயத்தினையும் மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பிரிவுடன் இணைந்து நடத்தினர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எவ்வகையான வீட்டுத்திட்டங்கள் அவசியமானது என்பதை மக்களுடன் கலந்துரையாடி 550 சதுர பரப்பளவுக்குள் வீட்டுத்திட்டத்தினை அமைக்கப்படவுள்ளதாகவும் 70 வீதமான வேலைப் பொறுப்புக்களை இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் செயற்படுத்தவுள்ளதாகவும், இதற்கான தடங்கல்களை ஏற்படுத்தும் காரணிகளை கூட வருகைதந்த இந்திய உயர் மட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆராய்ந்தனர். இது தொடர்பான தங்களின் அறிக்கையினை எதிர்வரும் வாரம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.