கொழும்பு உட்பட நாட்டிலுள்ள இந்து ஆலயங்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களையடுத்து நாட்டிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பொலிஸாரும் படையினரும் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். இதேபோன்று முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்து ஆலயங்களில் தொடர்ச்சியான பூசை வழிபாடுகள் இடம்பெறுவதனால் அங்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் ஆலய தர்மகர்த்தாக்கள் அரசியல் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தனவின் இணைப்புச் செயலாளருடன் நேற்று கலந்துரையாடியதாகவும் அதற்கான ஏற்பாடுகளை அமைச்சருடன் கலந்துரையாடி மேற்கொள்வதாக அவர் உறுதியளித்துள்ளதாகவும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினரும் தமிழர் பணிக்குழுவின் தலைவருமான நல்லையா குமரகுருபரன் தெரிவித்தார்.