இலங்கை – இந்தியா சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் இந்த ஆண்டு இறுதிக்குள் பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்ய, இரண்டு அரசாங்கங்களும் இணக்கம் தெரிவித்துள்ளன.
இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இணைந்த கூட்டு அரசாங்கத்தின் மிக முக்கிய பொருளாதாரத் திட்டமாக இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் காணப்பட்டது.
எனினும், இந்த எட்கா உடன்படிக்கையை செய்துக் கொள்வதால் தேசிய வர்த்தகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் இலங்கையில் தென்னிந்தியர்கள் குடியேறுவார்கள் என்றும் எதிரணித் தரப்பிலிருந்து தொடர்ச்சியாக எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டிருந்தன.
இதுதொடர்பில், அரசாங்கம் பல தெளிவுப்படுத்தல்களை மேற்கொண்டும் எதிரணியினர் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாமல், எட்காவுக்கு தொடர்ச்சியாக எதிர்ப்பினை வெளியிட்ட காரணத்தினால், இது குறித்த பேச்சுக்கள் இடை நிறுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையிலேயே, எட்கா தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்துக்கொள்ள இரண்டு அரசாங்கங்களும் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த உடன்படிக்கை குறித்து சில ஆரோக்கியமாக பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அந்தவகையில், அடுத்த வருட நடுப்பகுதியில் இந்த உடன்படிக்கை செய்துக்கொள்ள வாய்ப்புள்ளதாகவும், இதற்கிடையில் இலங்கை- சிங்கப்பூருக்கு இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது.