இன்று(17) திங்கட்கிழமை கிழக்கில் அம்மன் திருக்குளிர்த்திச்சடங்கு கல்யாணக்கால் வெட்டல் மற்றும் கடல்தீர்த்தம் எடுத்துவரல் போன்ற பாரம்பரிய சடங்குகளுடன் ஆரம்பமாகிறது.கொரோனா தாக்கத்தால் இம்முறை பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் .அத்துடன் நேர்த்திகளுக்கும் அனுமதியில்லை.
வைகாசி பிறந்துவிட்டால் கிழக்கின் பட்டிதொட்டியெல்லாம் பறையொலிச்சத்தமும் குழலோசையும் கேட்கும்.’ வைகாசிப்பொங்கல் ‘எனும் பாரம்பரிய சடங்கு உணர்வுபூர்வமாக பயபக்தியுடன் இடம்பெறும்.
அந்தவகையில் இலங்கையில் வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு கண்ணகை அம்மனாலய வருடாந்த திருக்குளிர்த்தி சடங்கு இன்று (17)திங்கள் மாலை ஆரம்பமாகின்றது.
இன்ளறு 17ஆம் திகதி திங்கட்கிழமை திருக்கதவுதிறந்து கல்யாணக்கால் நடும் வைபவத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 25ஆம் திகதி செவ்வாய் அதிகாலை திருக்குளிர்த்தி பாடலுடன் நிறைவடையவிருக்கிறது.
அண்மைக்காலமாக கொரோனா தீநுண்மியின் தாக்கம் படுவேகமாக அதிகரித்துவருவதனால் வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு கண்ணகை அம்மனாலய வருடாந்த திருக்குளிர்த்தி சடங்கின்போது பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆக ஆலயநிருவாகிகள் பத்துப்பேருக்கு மட்டுமே வழமைபோல பாரம்பரிய சடங்கு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
கற்பூரச்சட்டி ஏந்துதல் அங்கப்பிரதட்சணம் செய்தல் காவடி எடுத்தல் முதலான சகல நேர்த்திகள் செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
பாரம்பரிய சடங்கு என்பதால் அதை கிரமமாக அனைத்து சம்பிரதாயங்களையும் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பதிவுசெய்யப்பட்ட ஆலயநிருவாகிகள் பத்துப்பேர் மாத்திரம் சடங்குகாலத்தில் ஆலயத்தில் பூரணமாகத் தங்கியிருந்து அதனைச்செய்யவேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
கடைகளுக்கும் ஏனைய ஊர்வலம் மற்றும் வெளிவிடயங்களுக்கும் தடைசெய்யப்பட்டுள்ளது.பக்தர்கள் வீட்டிலிருந்தவாறே அம்மனை வணங்கலாம் எனக்கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் அன்போடு ஒத்துழைக்கவேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.