இராஜாங்க அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்ட சிறைச்சாலை கைதிகள் மீதான அச்சுறுத்தல் கண்டிக்கத்தக்கது
கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் ஆதங்கம்
ஜெனீவாவில் நடைபெறுகின்ற 48ஆவது மனித உரிமைகள் பேரவை அமர்வினை உதாசீனம் செய்யும் நோக்கிலும் இலங்கை தொடர்பான மனித உரிமைகள் மீறல் செயற்பாடுகளுக்கு வழு சேர்க்கும் நோக்கிலும் இராஜாங்க அமைச்சரின் அனுராதபுர சிறைச்சாலை கைதிகளின் அச்சுத்தல் அமைந்துள்ளது.
இவ்வாறு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் அவர்கள் சிறைக் கைதிகளின் அச்சுறுத்தல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் நீதியினை நிலை நாட்ட வேண்டிய இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அவர்கள் அனுராதபுரத்தில் கைதிகளை சகாக்களுடன் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியமை நீதித் துறைக்கு மாத்திரமல்லாது மனித உரிமை மீறலாக கருதவேண்டியுள்ளது.
அபிவிருத்தி இலக்கினை அடைந்த பல நாடுகளின் அரசியல் சற்று வித்தியாசமானது நாட்டின் தலைவராக இருந்தாலும் சரி, முக்கிய அமைச்சர்களும் தவறு செய்த மறு கணமே பதிவியினை துறந்து விடுகின்றனர்.அதுதான் நீதி ஆனால் அபிவிருத்தி அடைந்து வருகின்ற எமது நாட்டில் அவ்வாறான கருத்துக்கு இடமில்லை காரணம் முக்கிய பொறுப்புக்களில் உள்ள பலர் தவறுகள் புரிந்து கொண்டுதான் அரசியல் இலாபம் தேடுகின்றனர்.
தவறு புரிகின்றவர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்.நேற்றைய தினம் கைதிகளை அச்சுறுத்திய இராஜாங்க அமைச்சர் நாளைய தினம் சாதாரண பொது மக்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்த முடியும்.கட்சி பேதம் பாராது குற்றம் புரிகின்றவர்களுக்கு அரசாங்கம் பதவி துறந்து தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.