இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனினால் கொங்கிறீட் பேனல் நிரந்தர வீடமைப்புத் திட்டத்திற்கான” அடிக்கல் நடும் நிகழ்வுகள்

அதிமேதகு ஜனாதிபதியின் “நாட்டைக்கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு”  கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக “விரைவான கட்டுமான செலவு – செயற்திறன் கொண்ட கொங்கிறீட் பேனல் நிரந்தர வீடமைப்புத் திட்டத்திற்கான” மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அடிக்கல் நடும் அங்குரார்ப்பன நிகழ்வுகள்  (22)  திங்கட்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது. 
 
மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு, ஏறாவூர்ப்பற்று, வவுணதீவு – மண்முனை மேற்கு மற்றும் மண்முனை தென் மேற்கு – பட்டிப்பளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இராஜாங்க அமைச்சரின் சிபாரிசுக்கு அமைவாக நிர்மானிக்கப்படவுள்ள 1,280,000 பெறுமதியான 5 வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வுகளிற்கும் பிரதம அதிதியாக பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி மற்றும் மனைசார் கால்நடை வளர்ப்பு, சிறு பொருளாதாரப் பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர்
சதாசிவம் வியாழேந்திரன் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
 
அதற்கு அமைவாக வவுணதீவு நாவற்காடு கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிக்கான வீட்டிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
 
மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டிவைத்தார்.
 
மேலும் இந்நிகழ்வில் ஜப்கா நிறுவனத்தின் பணிப்பாளர் லுஸ்லன் நிக்கட்டின்,  பிராந்திய முகாமையாளர் பிரவீனா, மாவட்ட செயலக உயரதிகாரிகள், பிரதேச செயலக உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள்,  முற்போக்கு தமிழர் கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களென பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Related posts