அம்பாறை – திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் – 03 கிராம சேவகர் பிரிவில் அமைந்திருக்கும் இராணுவ முகாமியை அகற்றி, விஸ்வதுளசி வித்தியாலய மாணவர்களின் விளையாட்டு மைதானம், கல்விச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுத்து, பாடசாலை அபிவிருத்தி சங்கம், இன்று (01) ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்தது.
இவ்வார்ப்பாட்டப் பேரணி, விஸ்வதுளசி வித்தியாலய பாடசாலைக்கு முன்பாக ஆரப்பமாகி, பிரதான வீதி வழியாகச் சென்றது.
இதன்போது, திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன், திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன், திருக்கோவில் பொலிஸ் நிலையப் பெரும் குற்றப் பொறுப்பதிகாரி வி.எஸ்.எம்.சதாத், திருக்கோவில் பிரதேச சபைத் தவிசாளர் இ.வி.கமலராஜன் ஆகியோரிடம் நேரடியாக ஏற்பாட்டார்கள், மகஜர் கையளித்தனர்.
அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், அரசாங்க அதிபர் டி.பண்டாரவுக்கு மகஜர் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் ஏற்பாட்டார்கள் தெரிவித்தனர்.