சீனாவின் இலங்கை மீதான ஊடுறுவல் என்பது நிச்சயமாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் பாரியதொரு பகையை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடாக இருக்கும். அது கச்சை தீவை கூட இந்தியா மீளப்பெறக்கூடிய நிலமையை ஏற்படுத்தலாம் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
பல் வேறுபட்ட பெயர்களில் கொவிட் கிருமிகள் இருப்பதாகக் கூறினாலும் இலங்கையில் கொவிட் கிருமி வித்தியாசமானதாக இருக்கின்றது அரசியல் கொண்டாட்டங்களின் போது அது தொற்றாது. ஆனால் மக்கள் திண்டாட்டத்தை வெளியில் காட்டும் போது மாத்திரம் அது தோற்றுகின்ற நிலைமை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்றைய தினம் மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய சமகால அரசியலில் பல விதமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் நீதியமைச்சராகப் பொறுப்பேற்றமை, ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம் சட்டமூலம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட இருக்கின்றது, சீனா வடபுலத்தில் யாழ்ப்பாணம் வரை ஊடுருவியிருக்கின்றது, சேதனைப் பசளை பிரச்சினை மற்றும் சக்தி சிரச ஊடக நிறுவனத்தைத் தடை செய்வதாகப் பாராளுமன்றத்திலே பேசப்பட்டிருக்கின்றது போன்ற விடயங்கள் இடம்பெறுகின்றன.
அமைச்சர் பசில் ராஜபக்ஷ நிதியமைச்சராகப் பெறுப்பேற்றதன் பிற்பாடு ஆளுந்தரப்பில் பல்வேறு விடயங்கள் சூமூகமாகத் தீர்க்கப்படும் என்ற அடிப்படையில் அவர்கள் தெரிவித்தார்கள். அமைச்சர் அவர்களைப் புதியவராகப் பார்க்க முடியாது கடந்த காலங்களில் பல்வேறுபட் விடயங்களோடு சம்மந்தப்பட்டவர், பல்வேறு குற்றச்சாட்டுகளில் நீதிமன்றம் வரை சென்று இந்தப் புதிய அரசாங்கம் வந்த பின்னர் அவர் மீதான வழக்குகள் எல்லாம் விலக்களிக்கப்பட்டது.
எவராக இருந்தாலும் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது நடந்தால் நாங்கள் வரவேற்போம். ஆனால் கடந்த காலத்தில் அவரைப் பற்றி பலவிதமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அந்த அடிப்படையில் அவருடைய பிரசன்னம் கடந்த காலத்தில் விடப்பட்ட தவறுகளைத் திருத்தி முறையான வழியில் கொண்டு செல்லும் வகையில் இருந்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். பசில் ராஜபக்ஷ அவர்கள் அமைச்சராக வந்து கடந்த காலத்தில விட்ட தவறுகளை விடுத்து நாட்டிற்கும் மக்களிற்கும் நன்மை செய்யக்கூடியவராக இருந்தால் அதனை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் இல்லை என்றால் முன்னைய நிலவரத்தின்படிதான் செயற்பாடுகள் நகர்ந்துகொண்டு இருக்கும்.
தற்போது சக்தி சிரச ஊடக நிறுவனங்களின் உரிமப்பத்திரத்தைத் தடைசெய்வது குறித்து பேசப்படுகின்றது. உண்மையில் ஜனநாயகம் உருப்படியாக இருக்கின்றதென்றால் அதற்கு முக்கிய பங்கு வகிப்பது ஊடகங்கள். ஊடகம் அச்சுறுத்தப்படுமாக இருந்தாhல் அந்த நாட்டுக்கு ஜனநாயகம் சட்டவாட்சி என்ற சொற்பதங்கள் பொருத்தமற்றதாயிருக்கும்.
கடந்த காலத்தில் சக்தி ஊடக நிறுவனம் எரிக்கப்பட்டதையும் அறிவோம். அதேபோன்று 40க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதையும் அறிவோம். இது தொடர்பில் ஐ.நா வதிவிடப் பிரதிநிதி பலமான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். அமெரிக்க உயர்ஸ்தானிகரும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகம் மக்களாட்சி, சட்டவாக்கத்தைப் பாதுகாப்பதாக இருந்தாhல் ஊடகங்கள் மீது கைவைப்பதை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ரணில் விக்கிரமசிங்க அவர்களை பலமான சொற்பிரயோகங்களால் விமர்சனம் செய்திருக்கின்றது இந்த ஊடகம். தமிழ்; தேசியக் கூட்டமைப்பும் கூட அந்த ஊடகத்தினால் கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தது. இருந்தும் வன்முறை ரீதியாக அதனை எதிர்கொள்ளக் கூடிய விதத்தில் நல்லாட்சி அரசாங்கம் செயற்படவில்லை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் செயற்படவில்லை. தற்போது ஆளுங்கட்சியை நோக்கி அவர்கள் விரல் நீட்டியிருக்கின்றார்கள். ஆளுங்கட்சியை விமர்சிப்பது கடினமான விடயமாக இருந்தாலும் அதனை அவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள். அதனைத் தடுப்பதென்பது ஊடக சுந்திரத்திற்குக் கொடுக்கின்ற ஒரு மரண அடியாகத்தான் இருக்கும்.
ஏற்கனவே எமது விவசாயிகள் சேதனைப் பசளை செய்து வந்து அதன் மூலம் உச்சமான பயனைப் பெற முடியாது என்ற அடிப்படையில் தான் இரசாயணப் பசளைக்கு மாறினார்கள். இப்போது பழையபடி சேதனைப் பசளையைக் கொண்டு வருவது இயற்கை என்ற அடிபபடையில் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அதனை நடைமுறைக்குக் கொண்டு வரும் போது விவசாயிகள் பாதிக்கப்படுகின்றார்கள். இதனைப் பரீட்சார்த்தமாக செய்து பார்த்த பின்னர் கொண்டு வந்தால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் ஆனால் தற்போது சேதனைப் பசளை என்பது சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கின்றது.
ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலம் என்பதும் சர்ச்சைக்குரிய உரியதாக இருக்கின்றது. உண்மையாக அம்சம் என்வென்றால் கல்வி அமைச்சு, உயர் கல்வி அமைச்சு இந்த பல்கலைக்கழக செனட் சபை, கட்டுப்பாட்டு சபை, இதை விட தொழில் நிர்ணயம் செய்கின்ற நிறுவனங்கள் இப்படிப்பட்ட பல்வேறுபட்ட விடயங்களை கையாள்வதற்கு ஒரு சபையினை கொண்டுவரப் போகின்றார்கள். அந்த சபையில் 10 பேர் இருக்கப் போகின்றார்கள். இந்த 10 பேரையும் எடுத்துக்கொண்டால் அதில் ஐந்து பேர் ராணுவ வீரர்கள், இரண்டு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்கள் அதில் மூன்று பேர்தான் அரச நியமனம் பெற்றவர்களாக இருக்கப் போகின்றார்கள். அந்த அடிப்படையில் பார்க்கின்றபோது இந்த சபையானது தனியார் பாடசாலைகளை உருவாக்குதல் தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்குதல் போன்ற விடயங்களில் மிகவும் கடுமையான ஒரு அணுகுமுறையைக் கையாளப் போகின்றது.
எனவே எங்களுக்கு இதுவரை கிடைத்த இலவச கல்வி என்பது ஒரு கேள்விக்குள்ளாக்கப்படும் நிலை காணப்படுகின்றது. இது விடயம் சம்பந்தமாக ஜோசப் ஸ்டாலின் அவர்கள் ஆசிரியர் சங்கத் தலைவர் தன்னுடைய எதிர்ப்பை காட்டுவதற்காக தெருவில் நின்று ஆர்ப்பாட்டம் செய்தபோது கடுமையான முறையில் கைது செய்யப்பட்டு அவரை பிடித்து இழுத்துக் கொண்டு போனதைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. அது மாத்திரமல்லாது இந்த ஆட்சி வருவதற்கு ஒரு முக்கியமான காரணிகளாக இருந்த பௌத்த துறவி இவர்களையும் முறைத்துக் கொண்டு இழுத்துக்கொண்டு செல்வதை காண முடிந்தது. அதேபோன்று வயது முதிர்ந்த ஒரு பெண்ணையும்இழுத்துக் கொண்டு செல்கின்றார்கள் ஒரு பெண்ணை இழுத்துக்கொண்டு செல்லும்போது சட்டைகள் கூட கிழிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. எனவே இந்தப் போக்குகள் என்பது மக்களின் ஜனநாயக ரீதியாக அரசின் செயற்பாடுகளை கண்டிக்கின்ற செயலை ஒரேயடியாக அடக்குகின்ற ஒடுக்குகின்ற செயற்பாடாகவே அமைந்திருக்கின்றது. எனவே இப்படியான செயற்பாடுகள் நிச்சயமாகக் களையப்பட வேண்டும். ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும்.
இதைவிட சீனா தற்போது யாழ்ப்பாணம் வரை ஊடுருவி இருக்கின்றது. பூநகரியில் கௌதாரி முனையில் இப்போது கடலட்டை வளர்க்கும் ஒரு பண்ணையை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். இதுகூட இங்கு இருக்கின்ற மக்களுக்கு தெரியாமல் நடந்திருக்கின்றது. முறையான அனுமதி பெறப்படவில்லை. இப்படியெல்லாம் பார்க்கின்றபோது இன்று சீனா யாழ்ப்பாணம் பக்கமாக குடாநாட்டுக்குச் சென்றிருக்கின்றது. அது இந்தியா இலங்கை மீது ஆத்திரம் அடையக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. சீனா எங்களுக்குள் அபிவிருத்தி என்ற போர்வையில் வருகின்றபோது இந்தியா தன்னுடைய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்ற நிலைமை உருவாகின்றது. எனவே சீனாவும் இந்தியாவும் போட்டி போடுகின்ற மோதுகின்ற ஒரு போர்க்களமாக இந்து மா சமுத்திரத்தில் இலங்கை மாறப்போகின்றதா? என்ற கேள்வி எழுகின்றது. எனவே இப்படியான செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் தவிர்த்துக் கொண்டு அண்மையில் உள்ள இந்தியா ஜப்பான் சீனா போன்ற மற்ற நாடுகளோடு பொதுவான சமநிலையான உறவினை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆலோசனையாக இருக்கின்றது.
ஒரு முக்கியமான விடயம் அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்கின்ற போது அவர்கள் கைது செய்யப்படுகின்றார்கள், தனிமைப்படுத்தப்படுகின்றார்கள். ஆனால் அமைச்சர் பதவி ஏற்பதை சுட்டிக்காட்டி கொண்டாட்டங்கள் நடத்தப்படும் போது அங்கு கைதுகள் நடைபெறுவதும் இல்லை தடுப்பதும் இல்லை. அப்படியானால் இலங்கையில் பல்வேறுபட்ட கொரனா கிருமிகள் இருக்கின்றன. பல்வேறுபட்ட பெயர்களில் கிருமிகள் இருப்பதாகக் கூறினாலும் இலங்கையில் மேலும் வித்தியாசமான கிருமி இருக்கின்றது. அரசியல் கொண்டாட்டங்களின் போது அது தொற்றாது. ஆனால் மக்கள் திண்டாட்டத்தை வெளியில் காட்டும் போது மாத்திரமே அது தொற்றுகின்ற நிலைமை காணப்படுகின்றது.
அப்படி என்றால் இது அரசியல் வைரஸ் போலிருக்கின்றது. அதாவது அங்கு ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் பௌத்த குருமார்கள் என்றும் பார்க்காமல் கைதுகள் இடம்பெற்றன. எங்கும் பட்டாசுகள் வெடித்து முழுமையான உருவப் படங்களை வைத்து கொண்டாடுகின்ற போதும் அந்த இடத்தில் அவர்களை கைது செய்யப்படுவதுமில்லை, தடுப்பதும் இல்லை, தனிமைப்படுத்தும் இல்லை. ஆகவே இன்று கொரனா என்பது அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒன்றாக மாறியிருக்கின்றது. கொரோனாவை வைத்துக்கொண்டு எதிர்தரப்பினர் மக்களின் ஆர்ப்பாட்டங்களை அடக்குகின்ற ஒரு போக்கு காணப்படுகின்றது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கின்ற போது அது இந்தியாவிற்கு விடுக்கின்ற ஓரு சவாலாகத்தான் பார்க்கப்படுகின்றது. ஏன் என்றால் இன்று சீனா ஒரு முத்துமாலை வியூகத்தை அமைத்துவருகின்றது. பாகிஸ்தானாக இருக்கட்டும் நேபாலாக இருக்கட்டும் மியன்மாராக இருக்கட்டும் வங்காளதேசாக இருக்கட்டும் எல்லா நாடுகளிற்கும் அளவிற்கு அதிகமான கடன்களை கொடுத்து பொறிக்குள் விழுத்தி அந்த இந்தியாவை சுற்றி பெரியதொரு முத்துமாலை வியூகத்தை அமைத்து இருக்கின்றது.
அந்த முத்துமாலை வியூகத்தில் முக்கியமான ஒரு கேந்திர நிலையமாக இப்போது இலங்கை மாறி இருக்கின்றது. வட புலத்தில் அவர்கள் தங்களுடைய கால்களைத் தரிப்பார்களாக இருந்தால் இந்தியாவின் ஆயுத களஞ்சியமென்பது தென்னிந்தியா பக்கமாக இருக்கின்றது. ஆகவே நவீன தொழில் நுட்பங்களை வைத்துக்கொண்டு இந்தியாவை முழுமையாக அவதானிப்பதற்குரிய வாய்ப்பு இருக்கின்றது. இந்த நிலையில் கிழக்கில் வடக்கில் சீனா கால் ஊன்றுகின்றபோது நிச்சயமாக அது இந்தியாவிற்கு ஒரு பெரிய ஆத்திரத்தை ஏற்படுத்துகின்ற ஒரு செயலாக இருக்கும். அதன்மூலமாக இந்தியா மாத்திரம் அதனை எடுத்துக்கொள்ளாமல் யப்பானும் விரும்பாது. அமெரிக்கா விரும்பாது மேற்குலக நாடுகளும் விரும்பாது. எனவே அபிவிருத்தி என்கின்ற போர்வையில் சீனாவின் இலங்கை மீதான ஊடுறுவல் என்பது நிச்சயமாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் பாரியதொரு பகையை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடாக இருக்கும். அவர்களுடைய பாதுகாப்பை அடிப்படையாக வைத்துக்கொண்டு சில வேளைகளில் கச்சைதீவை கூட இந்தியா மீளப்பெறக்கூடிய நிலமை ஏற்படலாம் என்று தெரிவித்தார்.