மலையகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று சனிக்கிழமை பயங்கர சத்தத்துடன் நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.
ரிக்டர் அளவில் 3.55-தாக சிறிய நில அதிர்வே பதிவாகியள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிபிலி தெரிவிக்கின்றார்.
இதன்படி, பதுளை மாவட்டத்தின் ஹாலி-எல, பசறை, ஹல்துமுல்ல உள்ளிட்ட சில பகுதிகளில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலநடுக்கத்தினால் இதுவரை எந்தவிதமான சேதங்களும் பதிவாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
பயங்கர சத்தத்துடன் இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதுடன், பதுளை மாவட்ட மக்கள் தொடர்ந்தும் அச்சத்துடன் இருப்பதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் கூறினார்.
எனினும், இந்த நில அதிர்வு குறித்து எந்தவித அச்சம் கொள்ளத் தேவையில்லை என இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிபிலி மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
நில அதிர்வு ஏற்படும்போது, பாறைகள் உரசப்படுவதால் சத்தம் எழுவதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிசரிதவியல் பேராசிரியர் கபில தஹநாயக்க தெரிவிக்கின்றார்.
குறித்த நில அதிர்வு நிலப்பரப்பை அண்மித்து ஏற்பட்டுள்ளமையினால், சத்தத்தின் அளவு அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், நிலஅதிர்வுகளின்போது சத்தம் ஏற்படுமாயின், அது குறித்து அச்சம் கொள்ள வேண்டியதன் அவசியம் கிடையாது என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிசரிதவியல் பேராசிரியர் கபில தஹநாயக்க குறிப்பிட்டார்.
இந்த பகுதியில் மீண்டும் நிலஅதிர்வுகள் ஏற்படுவதற்கான சாத்தியம் உ்ளளதா என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிசரிதவியல் பேராசிரியர் கபில தஹநாயக்கவிடம் நாம் கேள்வி எழுப்பினோம்.
நிலஅதிர்வுகள் ஏற்படுகின்றமை குறித்து முன்னதாகவே கணித்து கூற முடியாது எனவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிசரிதவியல் பேராசிரியர் கபில தஹநாயக்க தெரிவிக்கின்றார்.