ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் பகிரங்கப்படுத்தப்படவேண்டும் என்பதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப்பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தவறியுள்ளதாகவும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உட்பட இலங்கையின் பல பாகங்களிலும் ஈஸ்டர் வழிபாடுகளின்போது மேற்கொள்ள்பட்ட குண்டுத்தாக்குதலில் பலர் கொல்லப்பட்டும் பலர் படுகாயங்களும் அடைந்தனர்.
இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட,தனது உறவுகளை இழந்தவர்கள் ஒரு வருடங்களை கடந்துள்ள நிலையிலும் இன்றும் அதன் பாதிப்பில் இருந்துவெளிவராத நிலையிலேயே இருந்துவருகின்றனர்.இந்த குடும்பத்திற்கு நீதியை பெற்றுக்கொடுக்கவோ அந்த குடும்பத்தின் கவலைகளை தீர்ப்பதற்கோ அரசுகள் எந்த நடவடிக்கையினையும் இதுவரையில் எடுக்கவில்லை.மாறிமாறி குற்றச்சாட்டுகள் மட்டுமே முன்வைக்கப்படுவதனை காணமுடிகின்றது.
பௌத்த மதத்தலங்களின் மீது தாக்குதல்கள் அக்காலப்பகுதியில் இடம்பெற்றிருந்தால் அரசாங்கம் இவ்வளவு பொறுமையுடன் தமது செயற்பாடுகளை முன்னெடுத்திருக்காது.அந்த மதத்திற்கு வழங்கும் முக்கியத்துவத்தினையும் தேவைப்பாடுகளையும் ஏனைய மதங்களுக்கு வழங்காதது என்பது கவலைக்குரிய விடயமாகும்.கண்டிதலதா மாளிகையின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து அந்த ஆலயத்தினை சூழவுள்ள பகுதிகள் போக்குவரத்து தடைசெய்யப்பட்டன.அது இன்றுவரையில் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது.ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இந்த நாட்டில் நடைபெற்றது என்ன என்பதை அனைவரும் அறிவார்கள்.
இந்த நாட்டில் சிறுபான்மை சமூகத்திற்கு நீதியில்லையென்பதை பல சம்பவங்கள் எடுத்துக்காட்டியுள்ளது.2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனபடுகொலையுடன் தொடர்புபட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது இன்று சர்வதேசத்திற்கே தெரியும்.
சிறுபான்மை சமூகத்தின் மீது தாக்குதல்களை நடாத்தி கொலைசெய்தவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய வரலாறுகளே இந்த நாட்டில் இருக்கின்றதே தவிர சிறுபான்மை சமூகத்திற்கு எந்தவித நீதியையும் இந்த அரசாங்கமும் வழங்கவில்லை.
ஆனால் இங்கு நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச சமூகத்தினால் முன்வைக்கப்பட்ட பொறுப்புக்கூறல்,மீண்டும் நிகழாமை,பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி போன்ற விடயங்களில் எதுவும் செய்யப்படவில்லை.குறிப்பாக நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பில் சரியான வெளிப்படுத்தல்கள் இல்லாதநிலையே இந்த நாட்டில் காணப்படுகின்றன.காணாமல்ஆக்கப்பட்டவர்களின் நிலை தொடர்பில் அரசாங்கம் எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையினையும் முன்னெடுக்கவில்லை.
இவ்வாறானதொரு நிலையிலேயே தமிழ் சமூகத்தின் மீது நடாத்தப்பட்ட எந்தவித செயற்பாடுகளுக்கும் நீதியை வழங்காத ஒரு அரசாங்கத்திடமே நாங்கள் நீதியை எதிர்பார்த்துநிற்கின்ற துர்ப்பாக்கிய இந்த நாட்டில் ஏற்பட்டுள்ளது.
ஒரு சமூகத்தினை கொன்றொழித்தவர் அவர் செய்த படுகொலைகள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு இந்த நாட்டின் நீதித்துறையினாலேயே குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவரை அந்த நாட்டின் ஜனாதிபதியே பொது மன்னிப்பு வழங்கியதும் இந்த நாட்டில்தான் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே ஈஸ்டர் தாக்குதலின்போது உயிர்நீர்த்தவர்களது குடும்பமும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் நீதியை எதிர்பார்த்துள்ளனர்.இவர்களுக்கு நீதியைப்பெற்றுக்கொடுக்கவேண்டிய பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது.