ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் திட்டத்திற்கான கொடுப்பனவு மற்றும் பயங்கரவாத வன்செயல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்ட ஈடு வழங்கும் நிகழ்வும் நேற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை, ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி மற்றும் கிரான் ஆகிய நான்கு பிரதேச செயலக பிரிவில் பயங்கரவாத வன்செயல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்களினால் பாதிக்கப்பட்ட 73 நபர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கும் நிகழ்வும், உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் திட்டத்தில் வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட ஒன்பது பயனாளிகளுக்கும் முதலாம் கட்ட காசோலைகள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
வாழைச்சேனை பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் வாழைச்சேனை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நசீர் அஹமட், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில், கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட முகாமையாளர் கே.ஜெகநாதன், பிரதே செயலகங்களின் உதவித் திட்ட பணிப்பாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவில் நிர்மானிக்கப்படவுள்ள வீடுகளிற்கான ஒன்பது பயனாளிகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் ஒன்பது இலட்சம் ரூபா பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது.
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் 51 பேருக்கு பதினாறு இலட்சத்து எழுபதாயிரத்து எழுபத்தெட்டு (1670078) ரூபாயும், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் 12 பேருக்கு இரண்டு இலட்சத்து இருபத்தேழாயிரத்து அறுநூற்றி பத்து (227610) ரூபாயும், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் 06 பேருக்கு ஒரு இலட்சத்து இரண்டாயிரத்து முன்னூற்றி அறுபது (102360) ரூபாயும், கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் 04 பேருக்கு நாற்பதாயிரம் (40000) ரூபாயுமாக மொத்தமாக நான்கு பிரதேச செயலக பிரிவிலும் பயங்கரவாத வன்செயல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்களினால் பாதிக்கப்பட்ட 73 நபர்களுக்கு இருபது இலட்சத்து நாற்பதாயிரத்து தொன்னூற்றி எட்டு (2040098) ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.