உதவிக்கல்விப்பணிப்பாளர் கண வரதராஜன் தனது 31 வருட கல்விச் சேவையில் இருந்து ஓய்வு.

 

(சா.நடனசபேசன்)

கல்முனை  வலயக்கல்வி அலுவலகத்தின் தமிழ்ப் பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் கண வரதராஜன் தனது 31 வருட கல்விச் சேவையில் இருந்து கடந்த 17 ஆம் திகதி ஓய்வுபெற்றுள்ளார்.

பெரியநீலாவணையினைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட இவர் பெரியநீலாவணையைச் சேர்ந்த பிரபல சோதிடர் சித்தவைத்தியர்  கரவாகு வடக்கு கிராமசபை உறுப்பினருமான அமரர்  பணிக்கப்போடி கணபதிப்பிள்ளை  தங்கரெத்தினம் தம்பதிகளின் புதல்வராவார.; அம்பாரை மட்டக்களப்புப் பிரதேசத்தில் தமிழை வளர்த்த பெருமகன் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

இவர் தனது ஆரம்பக் கல்வியினை பெரியநீலாவணை விஷ்ணுமகாவித்தியாலயத்தில் கற்று பின்னர் சிவானந்தா தேசியபாடசாலையில் கற்றதன் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பட்டதாரியாக தெரிவுசெய்யப்பட்டு கலைப்பட்டத்தினை நிறைவுசெய்ததுடன் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விபுலாநந்தா அழகியல் கற்கை நிலையத்தில் இசைக் கலைமானிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார்.

ஆசிரியராக 1988 ஆம்  ஆண்டு முதல் நியமனத்தினைப் பெற்று சிவானந்தா தேசிய பாடசலையிலும்  கல்முனை கார்மேல் பாற்றிமாக் கல்லூரி அக்கரைப்பற்று இராமகிருஷ்ணமிஷன்கல்லூரி,உவஸ்லி உயர்தரப்பாடசாலைகளில் கற்பித்து பின்னர் கல்முனை கல்வி வலயத்தில் வாழ்க்கைத்தேர்ச்சிப்பாடத்தில் வளவாளராகவும் 1999-2012 வரை தமிழ்ப்பாட அசிரிய ஆலோசகராகவும் அதனைத் தொடர்ந்து உதவிக்கல்விப்பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

சாமசிறி,கலாநிதி,சத்தியசிறி,தேசமானிய,ரத்தினதீபவித்தியா,தமிழ்கலைமாமணி போன்ற கௌரவப்பட்டங்களையும் பெற்றுள்ளார்.அத்தோடு அகில இலங்கை சமாதான நீதவானும், அம்பாரை மாவட்ட விபுலானந்த புனர்வாழ்வுக்கழகத்தின் செயலாளர்,சுவிஸ்உதயம் அமைப்பின் உபதலைவர்  அம்பாரை மாவட்ட கல்வி அபிவிருத்தி முன்னணியின் செயலாளர்  கல்முனை தொகுதியின் மாவட்ட விழிப்புணர்வுச் சபையின் ஆலோசகர், கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையின் 78 சமூகசேவகர் அமைப்பின் காப்பாளர் கல்முனை வடக்குப் பிரதேசசெயலக கலாசாரப் பேரவையின் ஆயூட்கால உறுப்பின் ஆகிய அமைப்புக்களில் இருந்து பொதுப் பணியாற்றிவருவதுடன்

சிவானந்தா பழையமாணவர் சங்கம், இராமகிருஷ்ணமிஷன் பழையமாணவர்மன்றம், கல்முனை,நவஜோதி நற்பணிமன்றம்,சமாதானநீதவான்கள் மனிதஉரிமை அமைப்பு, கொழும்பு மனித உரிமை அமைப்பு, அகில இலங்கை நல்லுறவுஒன்றியம், நம்நாடுநற்பணிப்பேரவை, மலையக கலைகலாசாரசங்கம், கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலை அபிவிருத்திக்குழு, பெரியநீலாவணை ஆலயங்களின் ஒன்றியம், உட்பட பல பொதுஅமைப்புகளில் இருந்து சேவையாற்றியுள்ளதுடன் தற்போதும் சேவையாற்றிவருகின்றார்.

இவர்  தனது இளமைக்காலத்தில் இருந்து இராமகிருஷ்ணமிஷன் குருகுலத்தில் கற்று இந்து சமயம் தொடர்பான பூரண  அறிவினைப் பெற்றதுடன்  ஆலயங்களில் திருமுறை ஓதல் கதாப்பிரசங்கம் உட்பட பலநிகழ்வுகளை நடாத்திவருவதுடன் பா ஓதும் முறையில் முதலிடம்பெற்றுவிளங்குகின்றார்.

இவர் உதவிக்கல்விப்பணிப்பாளராக இருந்தகாலத்தில் கல்முனை  கல்வி வலயத்தில் அகில இலங்கை தமிழ்மொழித்தினப் போட்டியில்  தேசியரீதியில் 21 தங்கப்பதக்கமும் 25 வெள்ளிப்பதக்கமும்  10 வெண்கலப்பதக்கமும் பெற்றதுடன் இதில் பாஓதல் துறைக்காக 7 தங்கப்பதக்கமும், 7 வெண்கலப்பதக்கமும் பெற்றுக்கொடுத்த பெருமை இவருக்கு உண்டு

இவரது சேவையினை நினைவு கூர்ந்து  இவருக்கு இரத்தினதீபம் விருது வழங்கும் விழாவில்  5 ரூபா பெறுமதியான தபால் தலையும் வெளியிட்டுவைத்தமை குறிப்பிடத்தக்கது

Related posts