இன்று(12) ஆரம்பமாவது ஒரு தவணைப்பரீட்சை அல்ல. மாறாக வாழ்க்கையின் மிகமுக்கியமானதொரு பொதுப்பரீட்சையாகும். இது தெரியாதா? என சிலர் இக்கணம் சிந்திக்கக்கூடும்.
உண்மை.2020க்கான க.பொ.த. உயர்தரப்பரீட்சை இன்று ஆரம்பமாகின்றது. கொரோனா காரணமாக இருதடவைகள் ஒத்திவைப்புகள் மற்றும் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் ,அரசாங்கத்தின் துணிச்சல்மிகு தீர்மானத்தின் பயனாக இன்று ஒருவாறு கனிந்திருக்கிறது.
க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று(12) திங்கட்கிழமை தொடக்கம் எதிர்வரும் ஒக்டோபர் 06 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியிலுள்ள 2,684 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளன.
இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சைக்கு 3,62,824 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தமக்கு இதுவரை அதற்கான அனுமதிப்பத்திரம் கிடைக்காதிருந்தால் விண்ணப்பதாரர் தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உபயோகித்து பயிற்சி திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலம் அதனைப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க, www.donets.lk என்ற இணையத்தளத்தில் www.slexams.com மூலம் தரவிரக்கம் செய்துகொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில் பரீட்சை நிலையங்களில் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் சுகாதாரத் துறை அதிகாரிகளை இணைத்துக்கொண்டு பரீட்சை நிலையங்களில் கிருமித் தொற்று நீக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறும் அவர் பரீட்சை நிலையங்களுக்கு பொறுப்பாகவுள்ள அதிகாரிகள் அதிபர்கள் பிரதி அதிபர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
நான்குதரப்பினர் யார்?
இன்றுதொடங்கும் இப்பரீட்சை தொடர்ச்சியாக 21நாட்கள் நடைபெறும். இந்த தருணத்தில் நான்கு தரப்பினருக்கு முக்கிய வகிபாகமிருக்கிறது என்பதை மறந்துவிடலாகாது.
மாணவர் பெற்றோர் மேற்பார்வையாளர்கள் சமுகம் ஆகிய இந்த நான்கு தரப்பினாரும் விரதமிருப்பதுபோல பல செயற்பாடுகளை மிகவும் கவனமாக முன்னெடுத்துச்செல்லவேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
இந்த நான்கு தரப்பில் அதிமுக்கியமாக பெற்றோரின் வகிபாகம் இன்றியமையாததாகவிருக்கிறது என்பதை மறந்துவிடலாகாது.எதற்காக இந்த எடுப்பு? என்று நீவீர்; கேட்பதும் புரிகிறது. சரி நேரடியாக விடயத்திற்குவருகிறோம்.
கொரோனாக் காலகட்டத்தில் முதன்முறையாக நடைபெறும் மிகமுக்கியமான பரீட்சையாக இவ் உயர்தரப்பரீட்சை நடைபெறுகிறது. உண்மையில் அரசாங்கத்திற்கு மட்டுமல்ல அனைவருக்கும் இதுவொரு பலப்பரீட்சைதான்.
அரசாங்கம் இத்தகைய இறுக்கமான சூழ்நிலையிலும் துணிச்சலாக பரீட்சையை நடாத்த முற்பட்டிருப்பது பாராட்டுக்குரியதே. மாணவர்கள் படித்து படித்து பரீpட்சைக்கு ஆயத்தமாகும்வேளையில் ஒத்திவைப்பு. பின்னர் படித்து தயாராகும்வேளையில் ஒத்திவைப்பு என்றால் உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் சோர்ந்துபோனார்கள்.சிலர் வழமையான வேகமில்லை.சிலர் சலித்துபோயுள்ளனர்.இந்தநிலையில் இம்முறையும் ஒத்திவைத்தால் மாணவர்கள் பாவம். படிப்பதில் ஒருவித வெறுப்பும் சோர்வும் இயல்பாகவே தோன்றுவதொன்றும் புதினமல்ல.
எனவே கொரோனாவிற்கேற்ப சுகாதார நடைமுறைகளைக்கைக்கொண்டு இலத்திரனியல்கண்காணிப்பு முறையையும்பயன்படுத்தி பரீட்சை இன்று ஆரம்பமாகின்றது.இறைவனின் ஆசியுடன் இது தொடர்ந்து எவ்வித இன்னலுமில்லாமல் நடைபெறவேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பு.
இந்தவேளையில் இந்த நான்கு தரப்பினர்களுக்கான பொறுப்பு என்ன? என்பதை பார்க்கவேண்டும். அதற்கு முன்பு சமகால கொவிட்19 வைரஸ் எத்தகைய தன்மையுடையது என்பதை சற்றுபார்ப்போம்.
வீரியமிக்க கொரோனா!
கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட கொரோனாத்தொற்று என்பது வெளிநாட்டவர்கள் தொடர்பால் சுற்றுலா வழிகாட்டியொருவருடாக ஏற்பட்டது. அதனைமுதலாவது அலை என்றார்கள். பின்பு கந்தக்காடு போன்ற முகாம்களில் ஏற்பட்ட தொற்று. அது இரண்டாவது தொற்று.
ஆனால் மூன்றாவது தொற்று ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் பெண்ணின் மூலமாக ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது. அந்தப்பெண்ணின் தொற்றுக்கான மூலம் இன்னும் கண்டறியப்படாதது கவலைக்குரியது மட்டுமல்ல மிக ஆபத்தானதும் கூட.
இன்று ஏற்பட்டிருப்பது கொத்தணிப்பரவலா? சமுகப்பரவலா? என்பதற்கு அப்பால் மிகவும் வீரியமிக்க வைரசாகவும் வேகமாக தொற்றும் கிருமியாகவும் இருக்கிறது என்பது மட்டும் உண்மை.இவ்வரைஸ் தொற்று ஏற்பட்டால் உடல்நிலைமோசமாக வலுவடைந்து உயிராபத்து ஏற்படுமளவிற்கு அதிகவேகத்தைக்கொண்டிருக்கிறது.
எனவே இது நாட்டு மக்களுக்கு ஆபத்து. வெகுவிரைவில் முழுநாடே முடக்கப்படலாம் என்ற எதிர்வுகூறல்களும் இல்லாமலில்லை.
ஏனென்றால் முதலாவது தொற்றின்போது சுமார் 6மாதங்களில் முழுநாட்டிலும் ஏற்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆக 3000மாத்திரமே. மெதுவான பரவல் எனலாம்.அதற்கு அரசாங்கமும் நாமும் எடுத்த சிரத்தை கவனம் என்பது அதீதம்.
ஆனால் இம்மூன்றாவது தொற்றின்போது நான்கே நான்கு நாட்களில் 1018பேருக்குமேல் தொற்றியுள்ளது. 16மாவட்டங்களில் அதன் தாக்கத்தை செல்வாக்கைச் செலுத்தியுள்ளது.
இம்முறை 3வது அலைக்கு எதிராக நிதானமான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. கொரோனாவுடன் வாழ்தல் என்ற புதியபோக்கிற்கமைய சவால்களை சமாளித்து முன்னேறுதல் என்ற பாங்கு காணப்படுகிறது.
இந்த மோசமான நிலைமையை கடந்துசெவ்லதற்கு நாட்டுமக்கள் ஒவ்வொருவரும் சுய பாதுகாப்பில் அதீதகவனம்செலுத்தவேண்டும். அத்துடன் அரசாங்கத்தின் சட்டதிட்டங்கள் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கவேண்டியது அவசியமாகும்.
கடந்தகாலத்தைப்போன்று அலட்சியமனப்பாங்கில் அசிரத்தையோடு செயற்பட்டால் அது நாட்டையும் மக்களையும் மிகமோசமான நிலைக்கு இட்டுச்செல்லும் என்பதில் ஜயமில்லை.
பரீட்சைக்காலங்களில் கைக்கொள்ளவேண்டிய நடைமுறைகள்:
பரீட்சை இன்று(12) தொடங்கும்போது எவ்வாறு சுகாதாரநடைமுறை விதிகளை அதாவது முகக்கவசம் அணிதல் கைகழுவுதல் சமுகஇடைவெளியைப பேணுகின்றோமா அவ்வாறே இந்த 21நாட்களிலும் இறுதி நவம்பர் 8ஆம் திகதிவரையிலும் மிகக்கிரமமாக அவற்றைப் பின்பற்றவேண்டும்.
ஒருநாள்கூட இந்த மேற்குறிப்பிட்ட நான்குதரப்பினரும் இவ்விதிமுறைகளை கைக்கொள்ளாமல் விடக்கூடாது. அவ்வாறு மறதியிலோ அலுப்பிலோ கைக்கொள்ளாமல்விட்டால் பாதிக்கப்படப்போவது மாணவன் மட்டுமல்ல முழு நாடே என்பதை மறந்துவிடலாகாது.
முகக்கவசம் அணிதல் இன்று சர்வசாதாரணமாகிவிட்டபோதிலும் அதன் பெறுமதி தெரியவில்லை பலருக்கு. மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள் இன்று ஹெல்மெட்டை பெரும்பாலும் பயன்படுத்துவது பொலிசாருக்காக. அதேபோல் இன்றைய காலகட்டத்தில் மாஸ்க் அணிவது இராணுவத்தினருக்காக என்றதொரு நிலை நிலவுகிறது.
உண்மை அதுவல்ல. எமக்காகவும் மற்றவருக்காகவுமே பாதுகாப்பின்நிமித்தம் மாஸ்க் அணிகிறோம்.எனவே பரீட்சைக்காலங்களில் மாணவர்கள் ஒருநாளைக்கொரு ஒருமாஸ்க் அணிதல் வேண்டும்.அல்லது பெற்றோர்கள் சவர்க்காரமிட்டு கழுவி ஸ்திரிக்கை பிடித்துக்கொடுக்கவேண்டும்.அதே போன்று பெற்றோரும் மேற்பார்வையாளர்களும் சமுகமும் இதனைப்பின்பற்றவேண்டும்.
மாணவர்கள் பயன்படுத்தும் பென் பென்சில் மற்றும் உபகரணங்கள் தனியாக பயன்படுத்தப்படவேண்டும். கைமாறக்கூடாது.
அணியும் சீருடை அல்லது உடுப்புகள் தினமும் சுத்தமாயிருத்தலை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். அவர்கள் இக்காலகட்டத்தில் சவர்க்காரத்தைப் பயன்படுத்தியே கழுவுதல் வேலையை செய்வது பொருத்தமாகும்.
அதேபோன்று உணவு. இது மிகக்கவனம்.கடைச்சாப்பாட்டைத் தவிர்த்தல் வேண்டும்.. வீட்டில் சமைத்துவழங்குவது நல்லது.வழமையான உணவைத்தவிர காரமான உறைப்பான ஒவ்வாத உணவுகளை தவிர்த்தல் நலம். நோய்எதிர்ப்புச்சக்தியை நீர்ப்பீடனத்தை உண்டுபண்ணும் உணவுகளை கொடுப்பது சிறந்ததே.
குடிதண்ணீர் பெரும்பாலும் வீட்டிலிருந்து கொண்டுசெல்லுதல் நல்லது. வீட்டுத்தண்ணீர் சுத்தமான போத்தலில் தனியே பருகக்கூடியவண்ணம் அமைதல் பொருத்தமாகும்.
பரீட்சைக்குப் போகும் போதும் கலைந்துவரும்போதும் கூட்டம்கூட்டமாக வர அனுமதிக்கவேண்டாம். மாணவர்களும் பரீட்சைமுடிந்ததும் நேராக வீடு வந்துசேருவது நல்லது. பஸ்ஸில் பயணித்து வீடுவருவோர் அதற்குரிய பாதுகாப்பு ஒழுங்குகளைக்கைக்கொண்டு பயணிப்பது சிறந்நது.
சுருங்கக்கூறினால்…
1) தமது பிள்ளைகளை முகக் கவசம் அணிந்தவர்களாக பரீட்சைக்கு அனுப்புங்கள்.
2) பரீட்சை மண்டபத்தில் நுழைய முன்னரும், வெளியேறும் போதும் கைகளை சவர்க்காரமிட்டு நன்கு கழுவச் சொல்லுங்கள்.
3) இயன்றவரை நீங்களே அழைத்துச் சென்று விடுங்கள். பரீட்சை முடிந்த பின் நீங்களே மீண்டும் அழைத்து வாருங்கள்.
4) தமது பிள்ளைகளுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் கொடுத்து அனுப்புங்கள். ஏனைய மாணவர்களிடம் எதனையும் இரவல் வாங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
5) பரீட்சை முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் கைகளை சவர்க்காரமிட்டுக் கழுவி உடனடியாக ஆடைகளை மாற்றிவிடுங்கள்.
6) பிள்ளைகளுக்குத் தேவையான குடிநீர் மற்றும் உணவை மறக்காமல் கொடுத்து விடுங்கள்.
7) பரீட்சை ஆரம்பமாக முன்னரோ அல்லது முடிவடைந்த பின்னரோ கூட்டம் கூட்டமாக கூடிநிற்க வேண்டாமென்று பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்லுங்கள்.
கல்வியமைச்சு பரீட்சார்த்திகளுக்காக இறுதியாக 10அம்சம் கொண்ட ஒரு படிவத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. விரும்பிய மொழியில் அதனை உண்மைக்கு உண்மையாக நிரப்பிக்கொடுப்பதில்தான் இப்பரீட்சை தொடர்ந்து நடப்பது தங்கியுள்ளது.
வீட்டில் யாருக்கும் காய்ச்சல் தடிமன் என்றால் அதனைக்குறிப்பிட்டால் பிள்ளையை பரீட்சைக்குத் தோற்றவிடமாட்டார்களோ என்று அஞ்சி அதனைக்குறிப்பிடாமல் விடுவதென்பது முழு மாணவர்க்கும் ஏன் முழுநாட்டிற்கும் செய்யும் துரோகமாகும்.
எனவே அப்படிவத்தில் கேட்கப்பட்ட 10அம்சத்திற்கும் சாரியான உண்மையான பதில்களை வழங்குவதனூடாக பரீட்சையை மட்டுமல்ல மாணவரை மட்டுமல்ல முழுநாட்டையும் காப்பாற்றமுடியும்.
ஓரிடத்தில் ஒரு பரவல் ஏற்பட்டால் படபடவென பரவலாக தொற்று பரவாய்ப்புண்டு. இவ்வளவுநாளும் கஸ்டப்பட்டுப்படித்து இரு தடவைகள் ஒத்திவைக்கப்பட்டு பல உளநெருக்கிடைகளுக்கு மத்தியில் பலப்பரீட்சையாக நடைபெறும் இப்பரீட்சை பலனற்றுப்போக வாய்ப்புண்டு.
பரீட்சைக்காலகட்டத்தில் மாணவர்தானே பரீட்சை எழுதுவது என்று மற்றவர்கள் வாழாவிருக்கமுடியாது. பெற்றோர் மிகஅவதானமாக செயற்படவேண்டும். அநாவசியமாக வெளியில் செல்வது தொடக்கம் சுகாதாரவிதிமுறைகளைப்பேணாதிருப் பதை முற்றாகத்தவிர்க்கவேண்டும்.
பரீட்சைக்கடமையிலீடுபடுபவர்கள் அனைவரும் இதேவிதிமுறைகளைக்கடைப்பிடிக்கவே ண்டும். மாணவர் அல்லது பெற்றோர் மாத்திரம்தான் கொரோனாவை தொற்றவைப்பார்கள் என்று தாம்விரும்பியவாறு நடந்துவிடமுடியாது. ஒரு மேற்பார்வையாளர் போதும் முழு மண்டத்தின் பரீட்சையை ரத்துச்செய்வதற்கு. வைரஸ் தீநுண்மி ஒரு வினாப்பத்திரம் அல்லது அனுமதி அட்டையூடாகப் பரவ நிறையவாய்ப்புள்ளது என்பதை மறந்துவிடலாகாது.
கொரோனோக்காலகட்டத்தில்தான் தேர்தல் நடாத்தினோம் எனவே அதேபாணியில் இப்பரீட்சையை நடாத்தலாம்என நினைக்கமுடியாது. காரணம் தேர்தல் இடம்பெற்றகாலம் முதலாவது அலையின் இறுதிப்பகுதி. நாட்டில் ஜனாதிபதி தொடக்கம் பாதுகாப்பு சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் 100வீதம் ஒத்துழைத்து கட்டுப்பாட்டிற்குள் வந்தநேரம்.
ஆனால் இன்றைய நிலைமை அப்படியல்ல. 3வது அலை ஆரம்பமாயிருக்கின்றதருணம். அதுவும் மிகவும் ஆக்ரோசமாக கிளர்ந்தெழுந்து தனது தீநாக்குகளை சமுகத்தின் மத்தியில் நீட்டியிருக்கின்றநேரம்.
எனவே பரீட்சை எடுக்கின்ற மாணவர் மாத்திரமல்ல அனைவரும் மிகவும் கவனமாக இன்றிலிருந்து வருகின்ற 21நாட்களும் கவனமாகச்செயற்படவேண்டியதன் அவசியம் உணரப்பட்டுள்ளது.
வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்