உயிரிழந்த மலையக சிறுமிக்கு நீதிகோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!!

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் இல்லத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்த மலையக சிறுமி ஹிஷாலினிக்கு நீதி வேண்டும் எனக்கோரி மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனை முன்பாக  (30) ஆந் திகதி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் குறித்த சிறுமியின் மரணத்துக்கான நீதி கண்டறியப்பட வேண்டும், குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும், சிறுமிகளை வேலைக்கு அமர்த்துவதை தவிர்க்க வேண்டும், வயது குறைந்தவர்களை வேலைக்கு அமர்த்துவதை தடை செய்யப்படவேண்டும், சிறுவர்களுக்கான ஒரு நீதிமன்ற பொறிமுறையை இலங்கை அரசாங்கம் வகுக்க வேண்டும் என்று பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
குறித்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ .பிரசாந்தன் , சட்டத்தரணி  மங்களேஸ்வரி உட்பட   தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்கள், மகளிர் அணியினர் , தமிழர்  முன்னேற்ற கழக  உறுப்பினர்கள் என பலரும்  கலந்துகொண்டதுடன், இங்கு வருகை தந்திருந்த தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தனிடம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்குமாறு கோரி மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts