உலகை உலுக்கும் கொடிய கொரோனாவை ஒழிக்க முடியுமா?உகந்தமலை முருகனாலய பிரதமகுரு சிவஸ்ரீ சீதாராம் குருக்கள் விளக்குகிறார்

ஒரு நாட்டில் அரசன் விதிக்கின்ற ஆணைகளை மக்கள் ஏற்று நடக்கவேண்டும். அப்போது அந்த நாடு சுபீட்சமடையும். மக்களும் சேமமாக இருப்பார்கள் என்று மனுநீதி நூல்கள் எடுத்தியம்புகின்றன. கிருமி சம்ஹாரத்தை வெல்ல வேண்டும் என்றால் ஒரே ஒரு சக்தியால் மட்டுமே வெல்லமுடியும். அதுதான் இறைசக்தி. அதனைப் பெற இறைபக்தி வேண்டும். இறைபக்தி துணையோடு கொரோனாவை ஒழிக்கமுடியும்.
 
இவ்வாறு கூறுகிறார் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகனாலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் அவர்கள்.
 
கிழக்கு மாகாணத்தின் தென்கோடியிலே கடலும் ,மலையும் சூழ்ந்த அடர்ந்த வனத்தினுள் மனோரம்மியமான சூழலில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கின்ற உகந்தமலை முருகன் ஆலயம் கதிர்காமத்தோடு ஒட்டிய நீண்ட வரலாற்றைக் கொண்டது.
 
திங்களன்று இவ்வாலயத்திற்கு சென்றபோது, யாருமில்லாத சூழலில் தன்னந்தனியனாக நின்று பகல் 12மணி நேரப்பூஜையை ஆலயத்தினுள் நிகழ்த்திக்கொண்டிருந்தார்.
மாத்தளை மேயர் சந்தனம் பிரகாஷ், கொரோனா நீங்க அங்கு ஏற்பாடு செய்த விசேட பூஜை வழிபாட்டின் பின்னர், பிரதமகுரு சீதாராம் குருக்கள் கொரோனா தொடர்பான செய்தியை வெளியிட்டார்.
 
உகந்தமலையிலிருந்து நாட்டுமக்களுக்கு அவர் விடுத்த செய்தியை இங்கு தருகிறோம்.
 

“அகில உலகத்தை கடந்த இரு வருட காலமாக கண்ணுக்குத் தெரியாத கொரோனா என்ற ஒரு நுண்ணுயிரி  சம்ஹாரம் செய்து கொண்டிருக்கிறது. அது மனிதகுலத்தை வாட்டிவதைத்துக் கொண்டிருக்கிறது.மனிதனுடைய நிம்மதியை குழிதோண்டிப் புதைத்து கொண்டிருக்கிறது. மக்களது வாழ்க்கை அல்லோலகல்லோலப் பட்டுள்ளது. இதுவே சமகால நியதியாகவும் அமைந்துவிட்டது.
 
இறைவனது அனுக்கிரகத்தால் கிடைத்தற்கரிய பிறவியெடுத்து பூமியிலே பிறந்தோம். அப்படிப் பிறந்த நாம் நல்லதை நினைந்து ,நல்லதை செய்து ஈற்றில் இறைவனது பாதாரவிந்தங்களை  சேரவேண்டும். இடைநடுவில் இன்பதுன்பங்களை தாங்கிவாழவேண்டும்.அத தவிர்க்கமுடியாதது. அதற்கு உதவுவது இறைபக்தியொன்றே.
கொடிய தொற்று நோயான கொரோனா நோய் நிச்சயம் நம்மை விட்டு அகலும். அதற்கு மக்களாகிய நாம் நல்ல கருமங்களைச் செய்ய வேண்டும். சமயமுறைப்படி வாழ்ந்தாலே போதுமானது.
 
5வகை பிரளயங்கள்!
உலகிலே மக்களை துன்பப்படுத்துவதற்காக அவ்வப்போது ஜந்துவகையான சம்ஹாரங்கள் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது.
 
1.ஜலப்பிரளயம் – நீரால் ஏற்படும் அழிவு அனர்த்தம்.
இது வெள்ளம் சுனாமி என்று பலவகையாக அர்த்தப்படும்.
2.அக்கினிப்பிரளயம் – தீயால் ஏற்படும் அனர்த்தம்.
இது தீவிபத்து காட்டுத்தீ எனலாம்.
3.மாருதப்பிரளயம் – காற்றால் ஏற்படும் அனர்த்தம்
இது சுழல்காற்று சூறாவளி என வெளிப்படும்
4.யுத்தப்பிரளயம் – சண்டையால் ஏற்படும் அனர்த்தம்
இது போர் வன்முறை என பலவகைப்படும்
5.கிருமிப்பிரளயம் – கிருமியால் ஏற்படும் அழிவு.-
இது கொள்ளை நோய் கொரோனா நோய் என பலவகையின.
 
இவற்றில் முதல் நான்கு வகையான பிரளயங்களும் ஒரு குறிப்பிட்ட குறுகிய காலப்பகுதியினுள் தனது தாக்கத்தைச் செலுத்தி அழிவை ஏற்படுத்தி விடைபெறும். அது வெள்ளமாகட்டும் தீயாகட்டும் சூறாவளியாகட்டும் போராகட்டும் அனைத்தும் குறுகியகாலப்பகுதிக்குள் தனது அழிவைக்காட்டும்.
 
ஆனால், ஜந்தாவது பிரளயமான கிருமிப்பிரளயம் அல்லது கிருமி சம்ஹாரம் இருக்கிறதே அது நீண்ட காலத்திற்கு தனது அழிவை வெளிப்படுத்திநிற்கும். ஓரிரு வருடங்களுக்குள் அதனை முடித்துவிடமுடியாது. கட்டுப்படுத்திவிடமுடியாது.
 
கிருமி சம்ஹாரம்!
மேற்கூறப்பட்ட ஜந்து சம்ஹாரங்களுள் இறுதி கிருமி சம்ஹாரமானது மிகவும் மோசமானது. பேரழிவைத்தரக்கூடியது. நீண்டகாலம் நீடிக்கும். எளிதில் கட்டுப்படுத்திவிடமுடியாது.
 
அதனை கடந்த கால வரலாறுகளிலிருந்தும் அறிந்துகொள்ளலாம். 100வருடங்களுக்கொருமுறை இப்படிப்பட்ட பேரிடர் பேரனர்த்தம் வந்து பேரழிவுகளை நிகழ்த்திவிட்டுச்சென்றிருப்பதைக் காணலாம். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.பெரிய சாம்ராஜ்யங்கள் அழிந்திருக்கின்றன.
 
கிருமி சம்ஹாரத்தை விரட்ட அல்லது ஒழிக்க நீண்டகாலம் எடுக்கும் என எமது சித்தர்கள் கூறியுள்ளனர்.
கிருமி சம்ஹாரத்தை வெல்லவேண்டுமானால் ஒரேயொரு சக்தியால் மட்டுமே வெல்லமுடியும். அதுதான் இறைசக்தி. அதனைப்பெற இறைபக்தி வேண்டும்.
 
ஒத்துழைப்பு அவசியம்
ஒரு நாட்டில் அரசன் விதிக்கின்ற ஆணைகளை மக்கள் ஏற்று நடக்கவேண்டும். அப்போது அந்த நாடு சுபீட்சமடையும். மக்களும் சேமமாக இருப்பார்கள் என்று மனுநீதி நூல்கள் எடுத்தியம்புகின்றன.
 
ஆகவே, எமது இலங்கைத்தீவு தற்போது எதிர்கொண்டிருக்கின்ற கொரோனா தாக்கத்திலிருந்து நாம் விடுபடவேண்டுமானால் அரசாங்கத்திற்கு ஒத்துழைக்கவேண்டும். அரச அதிகாரிகள் சுகாதாரத்துறையினர் பாதுகாப்புத்தரப்பினர் மிகுந்த ஊக்கமெடுத்து அர்ப்பணிப்புடன் கடந்த 2வருடகாலமாக இத்தீய நுண்ணுயிரியுடன் போரிட்டுவருகின்றார்கள். அதாவது மக்களாகிய எங்களைக்காப்பாற்ற பாடுபட்டுவருகிறார்கள்.
 
எனவே, நாம் அவர்களது அறிவுரைகளை சட்டதிட்டங்களைக்  கடைப்பிடித்து எமக்குள் ஒரு வரம்பை பாதுகாப்பை ஏற்படுத்தி பொறுமைகாத்து ஒத்துழைக்கவேண்டும். சுய கட்டுப்பாடுகளை விதித்து வெளியில் கண்டபடி நடமாடாது இறை சிந்தனையுடன் சிறிதுகாலம் இல்லங்களிலே தங்கியிருப்போமானால் நிச்சயம் இக்கொடிய நோயை இலங்கைத்தீவில் இருந்து மட்டுமல்ல உலகத்திலிருந்தே விரட்டிமுடியும்.
 
தெய்வத்தால் ஆகாதது ஏதுமில்லை. இறைவனால் முடியாதது ஒன்றுமேயில்லை. அனைவரும் சேர்ந்து பிரார்த்தித்தால் நிச்சயம் அவனது அனுக்கிரஹத்தால் இந்நோயை விரட்டமுடியும்.
 
எமது அன்றாட வாழ்க்கையை மனம்போனபோக்கில் இல்லாமல் அடக்கமாக சுகாதார நெறிமுறைகளுடன் பொறுமையோடு கடைப்பிடிக்கின்றபோது அது எம்மை விட்டு படிப்படியாக விலகும் .
 
நாட்டிலே அரச இயந்திரம் நிலைகுலைந்துள்ளது. எமது அன்றாட நடவடிக்கைகள் யாவும் ஸ்தம்பித்துள்ளன. இறைசந்நிதானங்கள் முடக்கப்பட்டிருக்கின்றன.
இவற்றையெல்லாம் மீண்டும் கட்டியெழுப்பவேண்டும். அது முடியும். மக்களால் முடியும். எப்படியென்றால் அது இறைபக்தியொன்றால் மட்டுமே முடியும்.
 
மக்கள் இறைபக்தியோடு இறைசிந்தனையோடு மனிதாபிமானத்தோடு பிறரையும் நினைந்து வாழமுற்படுகின்றபோது அது சாத்தியமாகும். எம்மிடமிருந்து பிறருக்கோ பிறரிடமிருந்து நாமோ இந்த கொடிய கிருமியை பெற்றுக்கொள்ளாதிருக்கவேண்டும். அதற்கு அடிப்படையில் முகக்கவசம் போன்ற சுகாதாரநெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றவேண்டும்.
 
 ஆகவே,நாட்டு மக்கள் அனைவரும் இன்றைய துன்பகரமான காலகட்டத்தில் எவ்வித வேறுபாடுகளையும் காட்டாது அவரவர் இறையை நினைந்து இறைபக்தியோடு பொறுமைகாத்து நெறிமுறைகளைப்பின்பற்றி வாழ்வோமானால் இக்கொடிய கொரோனாவிலிருந்து விடுபடலாம்

Related posts