உலகளாவிய ரீதியில் இன்று(03) பத்திரிகை ஊடக சுதந்திர தினம் அனுஸ்ரிக்கப்படுகின்றது.
இதன் அடிப்படையில் தான் ஐக்கிய நாடுகள் சபை 1993-ம் ஆண்டு மே 3-ம் தேதியை உலக பத்திரிகைச் சுதந்திர தினமாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் மே 3ம் திகதி‘பத்திரிகை சுதந்திர தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.
1991 ஆம் ஆண்டு இந்நாளிலேயே ஆப்பிரிக்கப் பத்திரிகைகளால் கூட்டாக ’பத்திரிகை சுதந்திர சாசனம்’ (Declaration of Windhoek) முன்வைக்கப்பட்டது. இது 1991 ஆம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) அமைப்பினால் நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தின் 26 ஆம் அமர்வில் சிபாரிசு செய்யப்பட்ட ,’உலகின் சகல பிராந்தியங்களிற்குமான பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்திற்கானதும், ஊடகச் சுதந்திரத்தினதும் பாதுகாப்பிற்கும் மேம்படுத்தலிற்குமான ஆணை’ என்ற தொனிப் பொருளில் பரிந்துரைக்கப்பட்ட கட்டளையின் நிமித்தமாக உருவானது.
கடந்த 1997ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும், இந்நாளில் ஆபத்து காலத்தில் பத்திரிகை சுதந்திரத்திற்காக போராடும் பத்திரிகையாளர் அல்லது அமைப்பு அல்லது நிறுவனத்திற்கு யுனெஸ்கோ விருது வழங்கி கௌரவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்த விருது, ‘யுனெஸ்கோ/கிலெர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திர விருது’ என அழைக்கப்படுகிறது.
கொலம்பியப் பத்திரிகையாளரான கிலெர்மோ கானோ இசாசா என்பவரின் நினைவாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. கிலெர்மோ விருதுடன் 25,000 டாலர் பணமும் பரிசு வழங்கப்படுகின்றது. விருதுக்குத் தகுதியானவர்களை சுமார் 14 நபர்களைக் கொண்ட குழு தேர்ந்தெடுக்கிறது.
‘எல் எஸ்பெக்டேட்டர்’ என்ற பத்திரிகையில் பணிபுரிந்த கிலெர்மோ, போதை பொருள் மாபியா கும்பலின் சட்டவிரோத கடத்தலை அம்பலப்படுத்தியவர். இதனால் கடந்த 1986ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி அவரது பத்திரிகை அலுவலகத்தின் வாயிலில் வைத்து சமூகவிரோதிகளால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். பத்திரிகை சுதந்திரத்திற்காக தனது தன்னுயிரை தந்த அவரது பணியை பாராட்டி, கௌ ரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் கிலெர்மோ பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு நாட்டின் நான்காவது தூண் ஊடகமாகும்.
பாராளுமன்றம், நிர்வாகத்துறை, நீதித்துறை மற்றும் பத்திரிகைதுறை ஆகையால்தான் இவற்றை ஜனநாயகத்தின் நான்கு தூண்கள் என்று சொல்லி வருகிறோம். இந்நிலையில் ஜனநாயகத்தின் மூன்றாவது தூணான நீதித்துறை நான்காவது தூணான பத்திரிகை துறையின் வாயிலாக நாட்டு மக்களுக்கு சில உண்மைகளை வெளிப்படுத்தி வருகின்றது .
சுதந்திரம் தேவை:
பத்திரிகைகள் நடுநிலையோடு செய்திகளை வெளியிட வேண்டும் என்பது தான் அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பும், விருப்பமும். ஆனால், அப்படி உள்ளதை உள்ளபடி காட்டும் காலக்கண்ணாடியாகச் செயல்பட, பத்திரிகைகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் சுதந்திரம் தேவை. பத்திரிகைகள் வெளிப்படையாக, நடுநிலையோடு செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தால் மட்டுமே, சமுதாயம் முன்னேறி, நாடும் வளர்ச்சி பெற முடியும்.
பத்திரிகை தர்மம்:
பத்திரிகை என்பது வாசகர்களின் மனசாட்சியை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். சமூகம் என்ன பேச நினைக்கிறது என்பதை அறிந்து, அதனை பேசவும், பேசவைக்கவும் வேண்டும் என்பது தான் பத்திரிக்கைகளின் அடிப்படை தர்மம்.
ஊழல், மக்கள் பிரச்சினைகளை மட்டுமல்லாமல் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை, அவலங்களை தோலுரித்துக் காட்ட வேண்டும். பரந்துபட்ட சமுதாயத்தை தட்டி எழுப்ப வேண்டும். அதற்கு ஊடகவியலாளர்கள் போன்ற எழுத்தாளர்கள் எப்பொழுதும் ஊடக தர்மத்தின் படி செயற்படுவது முக்கியமானதாகும்.
ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் மிகவும் முக்கியமானது பத்திரிகை. கடந்த கால நிகழ்வுகள், நிகழ்கால நிகழ்வுகள், பண்டைய வரலாறு, கல்வி, அறிவியல், கலை, இலக்கியம், விளையாட்டு, அரசியல் போன்ற பலவற்றை செய்திகள் மற்றும் படங்கள் மூலமாக மக்களுக்கு உண்மைத்தன்மை மாறாமல் கொண்டு சேர்ப்பதே பத்திரிகைகளின் தலையாய பணி ஆகும்.
உலகின் ஒவ்வொரு மூலையில் நடக்கும் நிகழ்வுகளையும், அதன் உண்மைத்தன்மை மாறாமல் உடனுக்குடன் மக்களுக்குத் தெரியப் படுத்துபவை பத்திரிகைகள் தான். அப்படிப்பட்ட பத்திரிகைகளை யாருக்கும் அஞ்சாமல் சுதந்திரமாக செயல்பட விட்டால் தான் உண்மை செய்திகளை உலகம் பெற முடியும்.