ஊடகவியலாளரை விசாரணைக்குப் பொலிஸார் அழைப்பு

(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் மீது பொலீஸ் விசாரணை.
 

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரை பொலீஸ் விசாரணைக்கு வருமாறு ஏறாவூர் பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.

செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணம் அவர்களுக்கு எதிராக  மட்டக்களப்பு கச்சேரிக்கு முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியிட்டமை குறித்து பிரதேச செயலாளர் வில்வரெட்ணம் அவர்களினால் செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் செ.நிலாந்தனை  ஏறாவூர் பொலிஸார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் ஊழல் தொடர்பாக செய்திகளை வெளியிட்டு வரும் சுதந்திர ஊடகவியலாளர் நிலாந்தன் மீது   கடந்த காலங்களில் பல தடவைகள் இதுபோன்ற பொலீஸ் விசாரணைகள் நான்கு தடவைக்கு மேல் நடைபெற்றுள்ள  நிலையில் தற்போது மீண்டும் ஊழல் தொடர்பான செய்திகளை வெளியிட்டதற்காக அவரை ஏறாவூர் பொலிஸார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

ஊடகவியலாளர் நிலாந்தன் மீதான விசாரணைக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காலத்துக்கு காலம் ஊழல் செய்யும் அதிகாரிகள் தங்களது ஊழல்கள் குறித்த செய்திகள் வெளிவரும் போது அதனை மூடி மறைப்பதற்காக ஊடகவியலாளர்கள் மீது அதிகாரத்தை பயன்படுத்தி தங்களது ஊழல்கள் வெளிவருவதை தடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது செங்கலடி பிரதேச செயலாளராக இருக்கும் ந.வில்வரெட்ணம் அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் செய்த ஊழல்கள் குறித்த பல கோவைகள் உள்நாட்டலுவல்கள் அமைச்சில் இருந்தும் அவரை கடந்த அரசாங்கம் பாதுகாத்து தங்களது அரசியல் தேவைக்காக பயன்படுத்தியது. 
 
அது குறித்த பல ஆதாரங்கள் ஊடகவியலாளர்களிடம் உண்டு. அதேபோல் பிரதேச செயலாளரினால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பல ஊழல் விசாரணைகளை தடுத்தவர்கள் யார் என்பதும் அனைவரும் தெரியும்.
 

தற்போது ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கம் உடனடியாக இதுபோன்ற ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் குறித்த பல  ஆதாரங்களை விரைவில் வெளியிடுவோம்.

இனியும் ஊழல் செய்யும் இவர் போன்ற அரச அதிகாரிகள் தங்களது ஊழல்களை மறைப்பதற்காக பாதுகாப்பு தரப்பையும் சட்டத்தையும் தவறாகப் பயன்படுத்தி ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்த வேண்டும். இது குறித்து புதிய ஜனாதிபதியின் கவனத்திற்கு நாம் கொண்டு செல்ல உள்ளோம்.என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related posts