ஊடகவியலாளர்களுக்கெதிரான அநீதிகளுக்கு நீதி கோரி மட்டக்களப்பில் கறுப்பு ஜனவரி மெழுகுவர்த்திப் போராட்டம்

இலங்கையில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றமைக்கு எதிராக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ‘கறுப்பு ஜனவரி’ தினத்;தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் மெழுகுவர்த்தி ஏந்திய போராட்டமும், ஊடகவியலாளர்களின் கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுர விநியோகமும் முன்னெடுக்கப்பட்டது.
 
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையம், அம்பாறை மாவட்ட ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தொழில்சார் ஊடகவியலாளர் சங்கம், கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் அமைந்துள்ள உயிர்நீர்த்த ஊடகவியலாளர் நினைவுத்தூபியருகே முன்னெடுக்கப்பட்டது.
 
இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது ஊடகவியலாளர்களின் கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரம் மக்களுக்கு வழங்கப்பட்டதுடன், ஊடகவியளார்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி தங்கள் போராட்ட நோக்கத்தினை வலியுறுத்தியதுடன் ஏந்திய மெழுகுவர்த்திகளை உயிர்நீர்த்த ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் வைத்து அஞ்சலி செலுத்தி போராட்டத்தினை நிறைவு செய்திருந்தனர்.
 
போராட்டத்தின் போது விநியோகிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் கோரிக்;கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
 
ஜனநாயகத்தின் பாதுகாவலர்களான ஊடகவியலாளர்களை பாதுகாக்க ஒன்றிணைவோம்!
 
இலங்கையில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக தங்களது உயிர்களை தியாகம் செய்த ஊடகவியலாளர்களை நினைவு கூறும் ‘கறுப்பு ஜனவரி’ மாதத்தில் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் முன்வைக்கின்றோம். அத்துடன் இலங்கையின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக தங்களது உயிர்களைப் பணயம் வைத்து செய்யப்படும் ஜனநாயகத்தின் பாதுகாவலர்களான ஊடகவியலாளர்களை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முன் வருமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
 
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் அனைவரும் உண்மைகளை வெளிக்கொண்டு வந்து இலங்கையின் ஜனநாயகத்தை பாதுகாக்க முயற்சி செய்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காவே படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட எந்த ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கும் இது வரை நீதியை பெற்றுக் கொடுக்க யாராலும் முடியாது போயுள்ளது.
 
மாறி மாறி ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்களினாலும் அவர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க முடியவில்லை. ஆனால் ஊடகவியலாளர்களை படுகொலை செய்தவர்கள், கடத்தியவர்கள், அச்சுறுத்தல் விடுத்தவர்கள், ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் என குற்றவாளிகள் அனைவரும் இன்றும் சுதந்திரமாக இந்த நாட்டில் நடமாடி வருகின்றனர்.
 
இலங்கையில் இன்றுவரை ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக பல ஊடகவியலாளர்கள் தங்களது உயிர்களை பணயம் வைத்து உண்மைகளை வெளிக்கொண்டு வந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு உண்மைகளை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது தொடர்ந்தும் உயிர் அச்சுறுத்தல்கள், கண்காணிப்பு நடவடிக்கைகள், ஊடகவியலாளர்களின் குடும்பங்கள் மீதான அழுத்தங்கள், பொய் வழக்குகள், புலனாய்வு துறையின் கண்காணிப்புகள், முன்னாள் ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தல்கள் என பல்வேறு வகைகளில் ஊடகத்துறை மீதான அழுத்தங்கள் அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டே செல்கிறது.
 
இலங்கையில் ஊடகத்துறை மீதான படுகொலைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகளின் காலத்தில் மிக சுதந்திரமாக மேற்கொள்ளப்பட்டு அதற்கு காரணமான குற்றவாளிகள் இன்று வரை கைது செய்யப்படாத நிலை தொடர்கிறது.
 
இலங்கையில் இதுவரை சுமார் 43 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 35 தமிழ் ஊடகவியலாளர்களும் 05 சிங்கள ஊடகவியலாளர்களும் 03 முஸ்லீம் ஊடகவியலாளர்களும் அடங்குகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களின் ஆட்சிக்காலத்தில் 01 ஊடகவியலாளரும் ரணசிங்க பிரேமதாச அவர்களின் ஆட்சிக்காலத்தில் 02 ஊடகவியலாளரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் 13 ஊடகவியலாளர்களும் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச அவர்களின் ஆட்சிக்காலத்தில் 26 ஊடகவியலாளர்களும் என 43 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட உட்பட சில ஊடகவியலாளர்கள் காணாமல் போயுள்ளனர். பல ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
 
எனவே தொடர்ந்தும் இந்த நாட்டில் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாகச் செயற்பட வேண்டுமாக இருந்தால் ஊடகவியலாளர்களை படுகொலை செய்த, காணாமல் ஆக்கிய ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது வழக்கு தாக்கல் செய்து தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மாத்திரமே ஊடக துறை மீது கைவைத்தால் தண்டணை கிடைக்கும் என்ற பயம் குற்றவாளிகளுக்கு ஏற்படும். ஆனால் இலங்கையில் ஊடகத்துறை மீது கைவைத்தால் விசாரணைகளோ, தண்டணையோ இல்லை என்ற நிலையில் தொடர்ந்தும் குற்றவாளிகள் சுதந்திரமாக செயற்பட்டு வருகின்றனர்.
 
எனவே ஊடகத்துறை மீதான படுகொலைகள் மற்றும் காணாமல் போன சம்பவங்கள் உயிர் அச்சுறுத்தல்களுக்கு சர்வதேச நீதி விசாரணை பொறிமுறை ஒன்றை கோரவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இலங்கையின் உள்ள நீதிப் பொறிமுறை ஊடாக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்காத நிலையில் எதிர்வரும் காலங்களில் சர்வதேச நீதி பொறிமுறை ஒன்றின் ஊடாக நீதி விசாரணை கோர உள்ளோம். எனவே இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட, தாக்குதல்களுக்கு உள்ளான, உயிர் அச்சுறுத்தல்களுக்கு உள்ளான, ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்களுக்கு நீதி கிடைப்பதற்கும், நீதி விசாரணைகளை மேற்கொண்டு ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் இலங்கையில் ஜனநாயகத்தை பாதுகாக்க செயற்படும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வருமாறு அழைப்பு விடுக்கின்றோம் என்று குறிப்பிடப்படு;டுள்ளது.
 
ஆர்ப்பாட்டத்தின் போது மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொருளாளர் கருத்துத் தெரிவிக்கையில்,
 
இந்த நாட்டில் ஜனநாயகத்துக்காகப் போராடுபவர்கள் ஊடகவியலாளர்கள். இதுவரை 43 ஊடகவியலாளர்களை நாங்கள் இழந்து நிற்கின்றோம். இத்தனை ஊடகவியலாளர்களும் தற்போது ஆட்சி பீடமேறியிருக்கின்ற இந்த அரசாங்கத்தின் காலத்திலேயே காணாமல் ஆக்கப்பட்டும், கடத்தப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும் இருக்கின்றார்கள். எனவே இந்த அரசாங்கத்திடம் நாங்கள் கேட்பது எமது ஊடகவியலாளர்களுக்கான ஒழுங்கான நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அதேபோன்று ஊடகவியலாளர்களின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும்.
 
ஊடகவியலாளர்களுக்கான நீதி கோரிய போராட்டத்தினை நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றோம். எனவே விரைவில் கடத்தப்பட்;ட, காணமல் ஆக்கப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லாவிடில் எமது போராட்டம் சர்வதேச ரீதியில் முன்நகர்த்தப்படும்.
 
தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கத்திற்கு நல்ல சந்தர்ப்பமாக இது இருக்கின்றது. அவர்களது முன்னைய ஆட்சியில் தான் ஊடகவியலாளர்களுக்கான அநீதிகள் இடம்பெற்றன. எனவே அதனைத் நிவர்த்திக்க தற்போதைய ஆட்சியில் அந்த ஊடகவியலாளர்களுக்கான நீதியான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். 

Related posts