– நூருல் ஹுதா உமர் –
.இன நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதில் இணைப்பு மொழியின் பயன்பாடு முக்கியமானது. எனவே இதை பாடசாலை கல்வியில் கட்டாய பாடம் ஆக்குகின்றபோது சிறுபிராயத்தில் இருந்து கற்று தேர்ச்சி பெற்று உச்ச பயனை சமூகத்தில் அனுபவிக்க கூடியதாக இருக்கும். கட்டிடங்கள் கட்டுவதும், தெருக்கள் போடுவதும் மாத்திரம் அபிவிருத்திகள் அல்ல. திறன்கள் விருத்தியே நீடித்த அபிவிருத்தி ஆகும் என அம்பாறை மேலதிக அரச அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் தெரிவித்தார்.
சமூக நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசனின் வழிகாட்டலில் அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரின் முயற்சியில் அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பேசும் ஊடகவியலாளர்களுக்கு நடத்தப்படுகின்ற 12 நாட்கள் இலவச சிங்கள மொழி கற்கை நெறியின் அங்குரார்ப்பண வைபவம் நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (08) காலை இடம்பெற்றது.
அங்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கும் உரையாற்றிய அவர்
போருக்கு பின்னரான இன்றைய சூழலில் தேசிய நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதில் முன்னின்று செயற்படுகின்ற அமைச்சர் மனோ கணேசன் இணைப்பு மொழி கற்கை நெறிகளை கற்பதற்கு வழி வகை செய்து தந்துள்ளார். அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வடிவமைக்கப்பட்ட இக்கற்கை நெறி அமைச்சரின் இணைப்பாளரின் முயற்சியில் அம்பாறை மாவட்ட தமிழ் பேசும் ஊடகவியலாளர்களுக்கு வாய்த்து உள்ளது. இவ்வாறான துறை சார்ந்த தரப்பினர்களுக்கு இணைப்பு மொழி கற்பித்து கொடுக்கப்பட வேண்டியது அவசியம். டிப்பிளோமா கற்கை நெறியாக எதிர்காலத்தில் இது மலர்தல் வேண்டும்.
ஊடக தொழில் உயர்வும், உன்னதமும் நிறைந்தது. ஊடகவியலாளர்கள் பொறுப்புடன் அவர்களின் கடமையை செவ்வனே செய்தல் வேண்டும். நவீன தொழினுட்பம் பெரிதும் வளர்ச்சி பெற்று உள்ள இக்காலத்தில்கூட அச்சு ஊடகங்களிலும், இலத்திரனியல் ஊடகங்களிலும் வெளி வருகின்ற செய்திகளே மக்களின் மேலான நம்பிக்கைக்கு உரியனவாக இருக்கின்றன. பொறுப்பற்ற வகையில் இணைய தளங்களில் துறை சார்ந்த ஊடகவியலாளர்கள் அல்லாதோரால் பதிவேற்றப்படுகின்ற செய்திகள் குரோதங்கள், விரோதங்கள் ஆகியவற்றை ஏற்படுத்துவனவாக உள்ளன. அரசாங்கம் ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை உறுதி செய்து உள்ளது. ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் அரசாங்கத்தின் அனுமதி வழங்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மாத்திரம் இணைய தளங்களில் செய்திகளை பதிவேற்ற அனுமதிக்கப்படல் வேண்டும் என்றார்.
அமைச்சரின் இணைப்பாளர் கே.ஆர். றிஸ்கான் முஹம்மட்டின் தலைமையின் இடம்பெற்ற இவ்வைபவத்தில் கட்டிடங்கள் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ. எம். சகீர் மற்றும் ஊடக அமைப்புக்களின் பிரதானிகள் பலரும் கலந்து கொண்டனர்.