எங்களின் எதிர்காலம் சூனியமாக மாறிவிடும் : நாம் நம்பக்கக்கூடிய சரியான தலைமையை அடையாளம் காணவேண்டும்- எம்.ஐ.எம். மன்சூர் பா.உ.

(நூருள் ஹுதா உமர்)
 
ஒழுக்கமற்ற ஒருவரை பாராமுகமாக விட்டுவிட்டு தமது பாட்டில் இந்த சமூகம் இனிமேலும் இருக்கமுடியாது. அப்படி ஒருவனை நாம் பாராமுகமாக விட்டதன் விளைவை இப்போது நாம் அனுபவித்து கொண்டிருக்கிறோம். ஸஹ்ரான் எனும் ஒருவன் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் பயங்கரவாதி என பெயரெடுக்க வைத்துவிட்டு சென்றுவிட்டார். அதன் வடு இப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது என அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.
 
தமிழா ஊடக வலையமைப்பின் கல்விப்பிரிவினரால் க.பொ. த. சாதாரண தர மாணவர்களுக்கான இலவச பயற்சி நூல் வெளியீட்டு விழா இன்று (07) சம்மாந்துறை அல்-மர்ஜான் எம்.எஸ். காரியப்பர் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
 
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர், தனி ஒருவனின் ஒழுங்கீனம் ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிப்பதை இனி ஒருபோதும் நாம் அனுமதிக்கக்கூடாது. ஒரு சஹ்ரானின் வினையால் உருவான பயத்திலிருந்தும், ஆத்திரத்திலிருந்தும் இன்னும் நாம் விடுபடமுடியாமல் இருக்கிறோம். பயங்கரவாதிகளாக முஸ்லிங்களை ஏனைய சமூகம் நோக்கும் ஒரு துர்பாக்கிய நிலைக்கு எங்களை கொண்டுசென்றிருக்கிறார்கள். இப்படியான தனிமனித ஒழுங்கீனர்களை நாம் இந்த சமூகத்தை கொண்டு கட்டுப்படுத்த தேவையான திட்டங்களை வகுக்க வேண்டும்.
 
அமைதியை, சகோதரத்துவத்தை போதிக்கும் புனிதமான மார்க்கம் இஸ்லாம். மனிதநேயத்தையும் சக மத கௌரவத்தையும் பாதுகாக்க சொன்ன மார்க்கம் இன்று இழிவாக பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த இழிசொல்லிலிருந்து மாற்றம் பெற வேண்டியதே எமது சவாலாக மாறியிருக்கிறது. அடுத்த இனத்தையும் மதித்து அவர்களுக்கிடையில் சகோதரத்துவமும், நல்லிணக்கமும் வளர்க்கப்படல் வேண்டும். 
 
அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும். எமது சிந்தனைக்கு எதெல்லாம் சரியாக படுகிறதோ அதுவெக்கலாம் சரியாகாது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தமக்கு சரியாக பட்டதாக எடுத்த தீர்மானம் பிழைத்திருக்கிறது. அரசியலில் வியூகம் அமைத்து அவசரமாக தீர்மானம் எடுக்கும் அளவுக்கு இங்கு யாரும் ஞனிகள் இல்லை. அரசியலை வாழ்வாக கொண்டவர்கள், அரசியலை தெளிவாக விளங்கியவர்களுக்கு கூட தீர்மானம் எடுப்பதில் குழப்பம் இருக்கிறது. அரசியல் தலைவர்களுக்கு அறிவுரை கூறும் பலரும் சமூக வலைத்தளங்கள் ஊடாக கூறும் அறிவுரைகளை கேட்டுநடந்தால் மட்டுமே அறிவுள்ளவர்களாக பார்க்கப்படுவார்கள்.
 
எதிர்வரும் தேர்தல்களில் இன அந்நியோன்னியத்தை சீரழித்து இனக்கலவரத்தை உருவாக்கி தேர்தலில் சூடுகாய திட்டமிட்டு கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மை மக்களின் ஆதரவில்லாமல் ஜனாதிபதியை உருவாக்க வியூகம் அமைக்கப்பட்டு அந்த நிலை வந்தால் எங்களின் எதிர்காலம் சூனியமாக மாறிவிடும். அதனால் நாம் நம்பக்கக்கூடிய சரியான தலைமையை அடையாளம் காணவேண்டும் என்றார்.
 
இந்நிகழ்வில் சம்மாந்துறை வலய பாடசாலைகளின் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.எஸ். நஜீம், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், கல்வியதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர். 

Related posts