எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து பல்வேறு தரப்பினர் முறைபாடுகளை செய்துள்ள நிலையில் அது குறித்து இறுதியான தீர்ப்பு ஒன்றினை முன்வைக்க முடியாதுள்ளது. வெகு விரைவில் எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து ஆராய்ந்து சபைக்கு அறிவிப்பேன் என சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்தார்.
பாராளுமன்றம் இன்று முற்பகல் 10.30 மணிக்கு கூடியது, இதனை அடுத்து சபாநாயகர் அறிவிப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை சபையில் எழுப்பப்பட்ட கேள்விகள் தொடர்பாக இன்றைய தினம் அது தொடர்பான நிலைப்பாட்டை அறிவிப்பிப்பதாக நான் அறிவித்திருந்தேன். எவ்வாறாயினும் இந்த விவகாரம் குறித்து விசேட தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு எம்.பிக்கள் குழுவொன்று என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவினால் இது தொடர்பாக எனக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையினாலும் , பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அது தொடர்பாக மீண்டும் கடிதமொன்றை கையளித்துள்ளதாலும் எதிர்க்கட்சி தலைவர் விவகாரம் குறித்து ஆராய்ந்து மிக விரைவில் எனது நிலைப்பாட்டை அறிவிக்கின்றேன் என குறிப்பிட்டார்.