எதிர்வரும் ஐந்து மாதங்களில் புதியதொரு அரசாங்கத்தினை உருவாக்கும் வாய்ப்பு நாட்டு மக்களுக்கு கிடைக்கப்பெறுவதுடன், இதன்போது தூய்மையான, மனிதநேயமிக்க, நாட்டை நேசிக்கும், ஊழல், மோசடியற்ற உண்மையான அரசியல்வாதிகளைக் கொண்ட மனிதநேய அரசாங்கமொன்றை உருவாக்குவதற்காக மக்கள் தமது வாக்குப் பலத்தை உபயோகிப்பார்கள் என தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
இன்றையதினம் (ஜூலை 15) நுவரெலியாவில் மாவட்ட பொது மருத்துவமனையைத் திறந்து வைத்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
நேர்மையான அரசியல்வாதிகளை ஆட்சிக்கு கொண்டுவர வாக்களிப்பதன் மூலம் மட்டுமே நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் பின்னடைவுகள் இருந்தபோதிலும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று தெரிவித்தார்.
நாட்டை நேசிக்கும் அரசியல்வாதிகள் மட்டுமே மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அவற்றைத் தீர்க்க பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்..
தற்போதைய அரசாங்கமானது தோட்டத் தொழிலாளர்களின் சுகாதார பிரச்சினைகளைத் தீர்த்து வைத்துள்ளதாகவும், இலவச சுகாதார மற்றும் கல்வி வசதிகளை மேம்படுத்துவதாகவும், மக்களின் பிற தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவும் தெரிவித்தார்.
சில அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது கட்சிகளின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களால் நாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதென்பது ஒரு ‘பலனற்ற பயிற்சி’ என்றும் அவர் கூறினார்.
அத்துடன் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகம் நாட்டை அழிக்க எளிதான வழி என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.