எமது போராட்டத்திற்கு மேலும் வலுச் சேர்க்கும் ஒரு செயற்பாடே நீதிமன்றத் தடையுத்தரவு

நாங்கள் நீதிமன்றத்தை மதிக்கும் நபர்கள், நீதிமன்றக் கட்டளைகளுக்கு மதிப்பளிப்போம். ஆனால் என்னதான் நீதிமன்றக் கட்டளை பிறப்பிக்கப்பட்டாலும், தடையுத்தரவை மதித்து அதனை மீறாத வகையில் நாங்கள் எமது போராட்டத்தை முன்னெடுப்போம். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் நாங்கள் இந்தப் போராட்டத்தை முடித்தே தீருவோம். எமது போராட்டத்திற்கு மேலும் வலுச் சேர்க்கும் ஒரு செயற்பாடே இது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு  மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

 
எதிர்வரும் 03ம் திகதி தொடக்கம் 06ம் திகதி வரை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போரட்டம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸாரினால் பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்ட நீதிமன்றத் தடையுத்தரவு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
இன்று களுவாஞ்சிக்குடி பொலிஸ் பொறுப்பதிகாரியினால் எதிர்வரும் 2021.02.03ம் திகதி நடைபெறவிருக்கின்ற போராட்டத்திற்கு கலந்து கொள்வதைத் தடைசெய்யும் பொருட்டு நீதிமன்றக் கட்டளை பெறப்பட்டு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் வேடிக்கையான விடயம் என்னவென்றால் இன்னமும் கொரோணாவைக் காரணம் காட்டி ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாது என்று சொல்லி நீதிமன்றத்தை நாடியிருக்கின்றார்கள்.
 
ஆனால், கொழும்பில் துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாக ஆயிரக்கணக்கானவர்கள் வந்து ஆர்ப்பாட்டம் செய்வதற்குப் பொலிஸினால் தடையுத்தரவு பெற முடியாது, ஏன்? அது அரசாங்கத்தின் பின்புலத்தில் மேற்nகொள்ளப்படுகின்ற விடயம் என்பதால் பொலிஸாரினால் தடையுத்தரவு பெற முடியாமற் போனதா? கடந்த காலத்தில் பிள்ளையான் அவர்கள் படுகொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டபோது நூற்றுக்கணக்கானவர்கள் நீதிமன்றின் முன் நின்று ஒரு சிறையில் இருந்து விடுதலை பெறுவதெல்லாம் ஒரு வெற்றியென்று கொண்டாடுவதற்காக நின்றார்கள். அதற்கும் பொலிஸார் எந்தத் தடையும் விதிக்கவில்லை. இதற்கு முன்பு கொரோணா ஆகக் கூடுதலாக இருந்த காலப்பகுதியில் இலங்கை பூராகவும் அமைச்சர்கள் பதவிப் பிரமானம் செய்த போது அதற்கான கொண்டாட்டங்கள், நடைபவணி, வாகனப் பவணிகள் செய்கின்ற போது அதற்கும் எவ்வித தடையுத்தரவுகளும் பெறப்படவில்லை.
 
அதெற்கெலலாம் தடையுத்தரவு எடுக்காத பொலிஸார் தற்போது ஒரு ஜனநாயக விரோத அரசுக்கெதிராக நாங்கள் மேற்கொள்ளவுள்ள அகிம்சை ரீதியான ஜனநாயகப் பேராட்டத்திற்கு எதிராக தடையுத்தரவு எடுத்திருப்பதென்பது வேடிக்கையான விடயமாகும். இது நாங்கள் எதிர்பார்த்த விடயமே. தற்போது எமக்குப் பதவி உயர்வுகள் கிடைப்பது போலவே நீதிமன்றத் தடையுத்தரவுகளும் கிடைக்கப்பெறுகின்றன. கடந்த ஒரு ஆறு மாதகாலமாக பத்திற்கும் மேற்பட்ட தடையுத்தரவுகள் எனக்குக் கிடைத்திருக்கும் என நான் நினைக்கின்றேன்.
 
இதில் அடுத்த விடயமாக ஜெனிவாவில் இடம்பெறும் மனித உரிமைப் பேரவைக் கூட்டம் தொடர்பில் அரசுக்கெதிராக மக்களைத் தூண்டிவிட்டு, இனங்களுக்கெதிராகவம், மதங்களுக்கெதிராகவும் நாங்கள் செயற்படுவோம் என்றும் தடையுத்தரவு எடுத்திருக்கன்றார்கள். அவ்வாறாயின் முதலில் இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட இந்த அரசாங்கத்தில் இருக்கும் முக்கிய அமைச்சர்களுக்கு எதிராகத்தான் தடையுத்தரவு எடுக்க வேண்டும். ஏனெனில் இனங்களுக்கெதிரான குழப்பங்களை அவர்கள் தான் செய்கின்றார்கள். எங்களுடைய மதவழிபாட்டுத் தலங்களில் வழிபாடு செய்வதைத் தடைசெய்து அங்கெல்லாம் பௌத்த ஆலயங்களை அமைக்கின்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற இந்த அரசாங்கம், ஜனாதிபதி மற்றும் ஆளுநர் உள்ளிட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் போன்றோர் தான் இனங்களுக்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்களே தவிர நாங்கள் செய்யவில்லை.
 
குறிப்பாக இந்த போராட்டம் கூட எதிர்வரும் 03ம் திகதி தொடக்கம் 06ம் திகதி வரைக்கும் மிகவும் அமைதியாகவும், அகிம்சையூடாகவும் தான் நாங்கள் முன்னெடுக்க இருக்கின்றோம். அதில் குறிப்பாக தமிழ் அரசியற் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி, இஸ்லாமிய சகோதரர்களின் ஜனாசா எரிப்புக்கு எதிர்ப்பத் தெரிவித்தல். பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பிரயோகித்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தல், கடந்த மாவீரர் தினத்தின் போது கைது செய்யப்பட்ட 40க்கும் மேற்பட்ட இளைஞர்களின் விடுதலை, அதே நேரம் மலையக மக்களுக்கான 1000 ரூபா சம்பளத்தினை வழங்குதல், மகாவலி, தொல்பொருள் என்பவற்றினூடாக மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் இவ்வாறான ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராகத்தன் நாங்கள் இந்த ஜனநாயகப் போராட்டத்தைச் செய்கின்றோமே தவிர இலங்கையிலுள்ள இனங்களுக்கிடையில் விரோதத்தை; துண்டும் வகையில் நாங்கள் எவ்வித செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை.
 
நாங்கள் நீதிமன்றத்தை மதிக்கும் நபர்கள், நீதிமன்றக் கட்டளைகளுக்கு மதிப்பளிப்போம். ஆனால் என்னதான் நீதிமன்றக் கட்டளை பிறப்பிக்கப்பட்டாலும், இந்த நீதிமன்றக் கட்டளைகளிலுள்ள விடயங்களை மதித்து அதில் குறிப்பிடப்படாத விடயங்களை கையாண்டு நாங்கள் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து மேற்கொள்வோம். எக்காரணம் கொண்டும் இந்தப் போராட்டத்தினை நிறுத்தக் கூடாது. எமது போராட்டத்திற்கு மேலும் வலுச் சேர்க்கும் ஒரு செயற்பாடே இது. இந்தத் தடையுத்தரவினைப் பார்த்து நாங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. நீதிமன்றங்களை மதிக்க வேண்டும். ஆனால் தடையுத்தரவுகளுக்குப் பயப்படத் தேவையில்லை. ஏனெனில் இன்று இலங்கையில் பல விடயங்கள் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் நாங்கள் சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை. எனவே நீதிமன்றத் தடையுத்தரவை மதித்து அதனை மீறாத வகையில் நாங்கள் எமது போராட்டத்தை முன்னெடுப்போம். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் நாங்கள் இந்தப் போராட்டத்தை முடித்தே தீருவோம்.
 
பொலிசார் அவர்கள் கடமையைச் செய்கின்றார்கள் எம்முடைய இனத்திற்காக, எமது மக்களுக்காக நாங்கள் எங்களது கடமைகளை நிச்சமாகச் செய்வோம் என்று தெரிவித்தார்.

Related posts