மன்னார் மனித புதைகுழியில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் மன்னார் நீதிமன்றத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் கார்பன் பரிசோதனைக்கு உட்படுத்த அமெரிக்காவின் புளோரிடாவுக்கு கொண்டு செல்லும் வகையில் மன்னார் நீதிமன்றத்தில் இருந்து பொலிஸ் பாதுகாப்புடன் கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
மன்னார் நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைய மன்னாரிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இவ் பொதியானது நேரடியாக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு புதைகுழி அகழ்வுப்பணிக்கு பொறுப்பான சட்டவைத்திய அதிகாரி சட்டவைத்திய நிபுணர் சமிந்த ராஐபக்சவிடம் விமான நிலையத்தில் வைத்து கையளிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்டுள்ளது.
குறித்த பொதியானது வியாழக்கிழமை (24) அதிகாலை விமானத்தின் மூலம் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாதிரி எலும்புக்கூடு அடங்கிய பொதி சட்டவைத்திய நிபுணர் சமிந்த ராஐபக்சவின் பொறுப்பிலே எடுத்துச் செல்லப்படுகிறது. கடந்த 17 ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக ஆஐராகிவரும் சட்டத்தரணிகள் நகர்வு பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து புளோரிடாவில் காபன் பரிசோதனைக்கு உட்படுத்தும் போது, அவற்றை அவதானிப்பதற்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பாக ஒருவர் செல்வதற்கு அனுமதி கோரியிருந்தார்கள்.
இதற்கமைய காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சார்பில் ஆஐராகிய சட்டத்தரனி வி.எஸ்.நிரஞ்சன் மற்றும் சட்டத்தரனி ஒருவரும், காணாமல் ஆக்கப்பட்ட அலுவலக பணிப்பாளர் ஒருவருமாக 4 பேர் இவ் பொதியுடன் செல்வதும் குறிப்பிடத்தக்கது.