ஏப்ரல் 21 தாக்குதலுக்கு காரணமானவர்கள் எந்த பின்புலத்தில் இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும் – வியாழேந்திரன் தெரிவிப்பு

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு காரணமானவர்கள் எந்த பின்புலத்தில் இருந்தாலும்  கைது செய்யப்பட வேண்டுமென்பதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூடிய கவனம் செலுத்துவதாக இராஜாங்க அமைசர் எஸ்.வியாழேந்திரன் இன்று (09) தெரிவித்துள்ளார்.
 
மட்டக்களப்பு சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை இந்துமயானத்தில் புதைத்ததற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இன்று (09) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ப்பட்டு எதிர்வரும் மார்ச் மாதம் 17 ஆந் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
குறித்த வழக்கில் இராஜாங்க அமைச்சருடைய இணைப்புச்செயலாளர் யோ.ரொஸ்மன், மாநகர சபை உறுப்பினர்களான செல்வி மனோகரன் மற்றும் அருள்தாஸ் சுசிகலா ஆகியோர் ஆஜராகியிருந்தனர். இதன்போது வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 17ம் திகதி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சீ.றிஸ்வான் அவர்களினால்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
இதன்போது இராஜாங்க அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்..
 
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கடந்த 2019 ஏப்பிரல் உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடியைச் சேர்ந்த தற்கொலை குண்டுதாரியான ஆசாத்தின் உடற்பாகத்தை கள்ளியன்காடு இந்து மயானத்தில் பொலிசார் புதைத்தனர்.
 
இந்துமயானத்தில் எமது சமூகத்தைச் சேர்ந்தவர்களை கொலை செய்த பயங்கரவாதியை புதைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது மக்களின் பிரதிநிதிகளான நாங்கள் அவ்விடம் சென்று புதைக்கப்பட்ட அந்த உடற்பாகத்தை தோண்டி எடுக்குமாறு மக்களுடன் சேர்ந்து குரல் கொடுத்தவேளை பொலிஸார் அதில் கலந்து கொண்ட பெண்களைக் கூட பாராது மிக மோசமாக  தாக்கினார்கள்.
 
அந்த அடிப்படையில் மாநகர சபை உறுப்பினர்களான திருமதி.செல்வி மனோகரன், சுசிலா, றொஸ்மன், அனோஜன் ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்டவர்கள் மீதும் என்னையும் சேர்த்து மொத்தமாக 5 பேருக்கு எதிராக கழகம் விளைவித்ததாக கூறி பொலிசார் வழக்கு தாக்குதல் செய்தனர்.
 
அந்த வகையில் குறித்த வழக்கானது 2019ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது இருப்பினும் குறித்த வழக்கானது எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதெனவும், அதேவேளை இந்த ஏப்ரல் 21 மிலேச்சத்தனமான தாக்குதலை இந்த நாட்டிலே மேற்கொண்டதான இந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புபட்டவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட்டு தக்க தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
 
அதே போன்று கடந்த சுதந்திர தின நிகழ்வின்போது நாட்டினுடைய ஜனாதிபதி இரண்டு விடயங்களை ஆணித்தரமாகக் கூறியுள்ளார் முதலாவது மத்திய வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர்கள்  அதனுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் அதே போன்று ஏப்ரல் 21 குண்டு தாக்குதலுக்கு காரணமானவர்கள் எந்த பின்புலத்தில் இருந்தாலும்  கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் இந்த விடயங்களில் நாட்டினுடைய ஜனாதிபதி மிகத்தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கின்றார் அதைத்தான் நாங்களும் கூறுகிறோம்  என்றார்.
 
ஆகவே இந்தப் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் இன்று கூட கண் பார்வை செவிப்புலன் மற்றும் கால் இழந்த நிலையில் இருக்கின்றார்கள் ஆகவே இவ்வாறான பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எவ்வாறாக இருந்தாலும் எந்த பின்புலத்தை கொண்டிருந்தாலும்  கைது செய்யப்பட வேண்டும்.
 
இந்த இரண்டு விடயங்களிலும் அரசாங்கம் மிகத் தெளிவாகவும் இருக்கின்றார்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் இவ்வாறான செயற்பாடுகள் இனிமேல் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என தெரிவித்தார்

Related posts