ஏறாவூர் பற்று பிரதே செயலகப் பிரிவிற்கான பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம் அபிவிருத்திக்ழுத் தலைவரும், பின்தங்கிய கிராம அபிவிருத்தி, மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச் செய்கை மேம்பாட்டு இராஜாஙக் அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் இன்று (31) ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் கே. தனபாலசுந்தரத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் 2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வும், 2022 ஆம் ஆண்டில் அனுமதி மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டன.
இவற்றில் 117 மில்லியன் ரூபா வரையான கிராம அபிவிருத்தித் திட்டங்கள், 68 மில்லியன் பெறுமதியான உள்ளுராட்சிப் பிரிவுகளுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செயலவுத்திட்டத்திலான நிதிஒதுக்கீட்டு வேலைத்திட்டங்கள் மற்றும் பிரதேச சபை, நகரசபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களுக்கான அனுமதிகளும் இதன்போது பெற்றுக் கொள்ளப்பட்டன.
இதுதவிர உள்ளுராட்சி சபைகள், கல்வி, சுகாதாரம், நகர அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மின்சாரம், வீதி அபிவிருத்தி, போக்குவரத்து, விவசாயம், கால்நடை, புவிச்சரிதவியல், கடற்றொழில் நீரியல் வளத்துறை, வனஜீவி மற்றும் வனப்பரிபாலனை உள்ளிட்ட அனேகமான திணைக்களங்கள் தொடர்பான வேலைத்திட்டகளின் மீளாய்வுகளும் இதன்போது மேற்கொள்ளப்பட்டதுடன் தொடர் நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகளும் இதன்போது வழங்கப்பட்டது.
விசேடமாக கல்குடா வலய பாடசாலைகளில் குரங்குளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. மேலும் மயிலத்தமடு, மாதவனைப் பிரதேசத்தில் உள்ள கால்நடைகளுக்கான குடி நீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும், அங்குள்ள பண்ணையாளர்களது வேண்டுகோளுக்கினங்கள பால் சேகரிப்பு நிலையம் ஒன்றினை பொருத்தமான இடத்தில் அமைத்துக் கொடுக்கவும் இதன்போது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்ட அமைப்பாளரும் தமிழ் பிரதேச அபிவிருத்திக்குழுக்களின் இணைத்தலைவருமான சந்திரமுகமார், செங்கலடி பிரதேச சபைத் தவிசாளர் எஸ். சர்வானந்தா, ஏறாவூர் நகரசபைத் தவிசாளர் எம்.எஸ். நளீம் உள்ளிட்ட உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், அரச உயர் அதிகாரிகள், சந்மந்தப்பட்ட திணைக்களங்களின் தலைவர்கள், விவசாய, கால்நடை அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் பிரசன்னமாயிருந்தனர்.