கிழக்கு மாகாணத்தின் கேந்திர முக்கியத்துவம் மிகுந்த இடமாக விளங்கும் மட்டக்களப்புக்கும் கொழும்புக்கும் இடையிலான தொடர்புகள் அன்றைய காலத்தில் இருந்தே ஏராளம். இதனால் 1928ம் ஆண்டு கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்புக்கான புகையிரதப் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டிருந்தது. காலப்போக்கில் சிலமுன்னேற்றகரமான வசதிகளும் இப்போக்குவரத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டன. இருப்பினும் உள்நாட்டு யுத்த கால அசாதாரண சூழ்நிலை காரணமாகச் சிலகாலம் தடைப்பட்ட புகையிரதப் போக்குவரத்து மீண்டும் 2004ம் ஆண்டு முதல் ஆரம்பமாகி தற்போதும் நடைபெற்று வருகின்றது.
மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் அமைவிடமானது புகையிரதப் பாதையின் முடிவிடமாக அமையப் பெற்றுள்ளது. ஆதலால் அக்கரைப்பற்று, திருக்கோவில், தம்பிலுவில்,காரைதீவு பொத்துவில், கல்முனை, மற்றும் காத்தான்குடி ஆகிய இடங்களைச் சேர்ந்த பயணிகள் மட்டக்களப்பிலிருந்து தமது ரயில் பயணங்களை மேற்கொள்கின்றனர்.
அதிலும் குறிப்பாக அரச சேவையில் உள்ள உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் தமக்கு சலுகையாகக் கிடைக்கப் பெறுகின்ற புகையிரத ஆணைச்சீட்டு வசதியினை பயன்படுத்த மட்டக்களப்பு புகையிரத நிலையத்தினை நாடுவது வழக்கமாகும். இப்புகையிரதப் போக்குவரத்துச் சேவையானது இலங்கை அரசாங்கத்தினுடைய முழுமையான உரிமையுடையது. ஆகையினால் இச்சேவையினை பாரபட்சம் இன்றி நாட்டின் எப்பிரதேசத்திற்கும் வழங்க வேண்டியது அரசின் பொறுப்பாகும்.
மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் இருந்து தினமும் சாதாரண மற்றும் கடுகதி புகையிரதங்கள் கொழும்புக்கு பிரயாணம் செய்கின்றன. இவற்றில் கடுகதிப் புகையிரதங்களான பாடுமீன், உதயதேவி ஆகிய புகையிரதங்கள் முதலாம் வகுப்பு ஆசனங்களை உள்ளடக்கியுள்ளன. இம்முதலாம் வகுப்பிற்கென ஆசனப் பதிவுகள் மேற்கொண்டு அதற்கேற்ப பிரயாணிகள் பயணத்தை தொடர்கின்றனர்.
இருப்பினும் தற்போது மட்டக்களப்பில் இருந்து காலை 6.10இக்குப் புறப்படும் ‘உதயதேவி’ புகையிரதத்தில் இருந்த காட்சிகாண் கூடம், மற்றும் முதலாம் வகுப்பிற்குரிய உறங்கலிருக்கைப் பெட்டி ஆகியன அகற்றப்பட்டு, ஆசனஒதுக்கீடுகள் இன்றி பிரயாணம் இடம்பெற்று வருவதைக் காணக் கூடியதாக உள்ளது.
அத்துடன் மட்டக்களப்பில் இருந்து மாலை 08.15 க்குபுறப்படும் ‘பாடுமீன்’ புகையிரதத்தின் முதலாம் வகுப்பிற்குரிய உறங்கலிருக்கைகளாக இதுவரை இரண்டு பெட்டிகள் காணப்பட்டன. எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்து காரணமாக உறங்கலிருக்ைகப் பெட்டி தடம்புரண்டு சேதமாகி விட்டது. புகையிரதத் தண்டவாளத்தை விட்டு அகன்ற நிலையில் முதலாம் வகுப்புக்குரிய உறங்கலிருக்கைப் பெட்டி மட்டக்களப்பு_கொழும்பு ரயில் பாதையருகே காணப்பட்டது.
இதன் காரணமாக தற்போது பிரயாணிகளின் முதலாம் வகுப்பிற்குரிய உறங்கலிருக்கைப் பெட்டி ஆசன ஒதுக்கீடுகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உள்ளன.எனவே பிரயாணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2018ம் ஆண்டின் இறுதிக் காலகட்டத்தில் விடுமுறைப் பிரயாணங்களை மேற்கொண்ட பொதுமக்கள், அரச அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், மாணவர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் முதலாம் வகுப்பிற்குரிய உறங்கலிருக்கைப் பெட்டிக்குரிய பிரயாணச்சீட்டு வைத்திருந்தும் இரண்டாம், மூன்றாம் வகுப்பு பெட்டிகளில் இருந்து பயணித்திருந்தமையை காணக் கூடியதாக இருந்தது.
எவ்வாறாயினும் பிரயாணத்தை மேற்கொள்ளும் பிரயாணிகள் உரியதொகைப் பணத்தை அரசுக்கு கொடுத்து சொகுசாகப் பிரயாணம் செய்ய தயாராக இருந்தாலும், சொகுசுக்குரிய போதுமான இருக்கைகள் இல்லாமல் மட்டுப்படுத்தப்பட்ட அளவு ஆசனங்கள் முன்னுரிமையடிப்படையில் ஒதுக்கி விநியோகித்து பிரயாணம் இடம்பெற்று வருகின்றது.
அத்துடன் மட்டுமல்லாது மட்டக்களப்பு புகையிரத நிலையமானது ஓர் தொடக்க, இறுதிப் புகையிரத நிலையமாக செயற்பட்டு வருகின்றது. அங்கு வருகின்ற பிரயாணிகள் உணவு உண்பதற்கான சிற்றூண்டிச்சாலை இருந்தும் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்ட நிலையில் கடந்த நான்கு வருடங்களாக அச்சாலை காணப்படுகின்றது.
மட்டக்களப்பு_ – கொழும்பிற்கு இடையில் பயணிக்கும் புகையிரத இயந்திரங்கள் மிகவும் பைழமையான நிலையில் காணப்படுவதனால் அடிக்கடி இயந்திரக் கோளாறு ஏற்படுகின்றது. இதனால் பிரயாணத்தில் தேவையற்ற தடையும், தாமதமும் உருவாகியிருந்தமையை கடந்த வருடத்தில் சுமார் இருபது தடவைகளுக்கு மேல் அவதானிக்க முடிந்திருந்தது. இதனால் நோயாளர்கள் உட்பட ஏராளமான பயணிகள் சொகுசுப் பயணத்தை ரயில் மூலமாக மேற்கொள்ள முடியாதுள்ளது.
மேற்குறித்த பொதுமக்களின் அசௌகரியங்களை எடுத்துக் கூறி அவற்றுக்குத் தீர்வு காணும் பொருட்டு பொதுமக்கள் ஆலோசகர்கள் குழுவொன்று இலங்கை புகையிரத திணைக்களத்தில் இருப்பதாக அறியக் கிடக்கின்றது. இருப்பினும் அக்குழு போதுமான தீர்வுத் திட்டங்களை முன்வைக்கும் போது இப்பிரதேசத்தைச் சார்ந்த சிவில் பிரதிநிதிகளையும் உள்வாங்கிக் கொள்வது வரவேற்கத்தக்க விடயமாகும். இதனால் மேற்குறித்த வகையிலான பிரச்சினைகள் எதிர்காலத்தில் உருவாகாமல் தவிர்த்துக் கொள்ளலாம்.
தற்காலத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புகையிரதப் பெட்டிகள் இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையின் எல்லாப் பாகங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு பிரயாணிகளின் பாவனைக்கு இவை இதுவரை எட்டாக்கனியாகவே உள்ளன.
இவ்வாறு மட்டக்களப்பு முதல் கொழும்பு வரையிலான ரயில் பயணத்தைத் தொடரும் பிரயாணிகள் கடும் அசௌகரியங்களைளே எதிர்கொள்கின்றனர்.இந்த ரயில் சேவை 90 வருட கால வரலாற்றைக் கொண்டிருப்பினும் இவ்வாறான குறைபாடுகள் சீர் செய்யப்படாமலேயே உள்ளன. மலர்ந்துள்ள 2019இல் இக்குறைபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் முன்வர வேண்டும் என்பதே பயணிகளின் வேண்டுகோள் ஆகும்.