நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களின் சிந்தனையுடன், நிதி அமைச்சின் அனுசரனையுடன் 2022 ஆம் ஆண்டின் வரவுசெலவுதிட்ட முன்மொழிகளின் விசேடமாக முன்னுரிமை வழங்கி பிரதேச மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் புதிய தோற்றப்பாட்டுடன் செயற்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் கருத்திட்டங்களை ஒரே தடவையில் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வினை 2022 பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 8.52 எனும் சுபநேரத்தில் கிழக்கு திசை நோக்கி நடத்துவதற்கான நடவடிக்கைகள் நாடுபூராகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதற்கமைவாக
மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள 27 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 189 வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவிருப்பதற்கு அமைவாக முதல் காலாண்டிற்குரிய 07 வேலைத் திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் ஆரையம்பதி கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் நடைபெற்றது.
குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சரும், மண்முனைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான சதாசிவம் வியாழேந்திரன் கலந்துகொண்டிருந்ததுடன்,
மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான க.கருணாகரன் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ரீ.சுரேந்தர், மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எம்.ஜெயச்சந்திரன், ஆரையம்பதி கிழக்கு கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்ததுடன், இத்திட்டத்தினை ஆரம்பிக்கும் முகமாக இறைவணக்கத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வில் தொனிப்பொருள் கீதம் இசைக்கப்பட்டு, பிரதேச செயலாளரினால் வரவேற்புரையுடன் கூடிய திட்டம் தொடர்பான தெளிவுபடுத்தலினைத் தொடர்ந்து,
மு.ப 8.52 எனும் சுப வேளையில் கிழக்கு திசை நோக்கியதாக, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அலுவலகத்திற்கான திருத்த வேலைகளை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிக்கும் முகமாக அடிக்கல் நடும் நிகழ்வு இடம்பெற்றதுடன், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான அனுமதி கடிதங்கள் பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.