ஒரு மருத்துவரின் மருத்துவமனை நாள்கள்” கவிதை நூல் வெளியீடு!!

மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில், வைத்திய கலாநிதி இரா. முரளீஸ்வரனின் “ஒரு மருத்துவரின் மருத்துவமனை நாள்கள்” கவிதை நூல் வெளியீடு எதிர்வரும் 30.04.2022 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு மட்டக்களப்பு பிள்ளையாரடி தமிழ்ச்சங்க கட்டடத்தில் இடம்பெறவுள்ளது.
 
மட்டக்களப்பு தமிழ்ச்சங்க தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சித மூர்த்தி தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு முன்னிலையாக கிழக்குப் பல்கலைக்கழக முன்னால் மொழித்துறைத்தலைவர் பேராசிரியர் செ. யோகராசா அவர்களும், முதன்மை அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன், கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் வைத்திய கலாநிதி.வே.விவேகானந்தராஜா ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
 
வைத்தியகலாநிதி இரா. முரளீஸ்வரன் ஒரு சிறந்த மருத்துவ நிருவாகி மட்டுமல்லாமல் ஓர் உன்னத இலக்கியப்படைப்பாளியுமாவார். 1976ல் யாழ்ப்பாணம் நெல்லியடியில் பிறந்து 1985ம் ஆண்டுகளின் பின்னர் மட்டக்களப்பில் வாழ்ந்துவரும் இவர் தனது கல்வியை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியிலும், மருத்துவ பட்டப்படிப்பை யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும் மருத்துவ நிர்வாக முதுமானியை கொழும்பு பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார்.
 
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மருத்துவராக 2005ம் ஆண்டிலிருந்து கடமையை தொடங்கி 2013ம் ஆண்டு கல்முனை ஆதாரவைத்தியசாலை வைத்திய அத்தியட்சகராகி தற்போதுவரை அங்கு தொடர்ந்து பணிபுரிகின்றார். மருத்துவ அனுபவங்களும் கவிதை அனுபவமும் இணைந்த மருத்துவமனை நாள்களைப்பற்றிய கவிதைகள் சேர்ந்த கவிதைத் தொகுப்பாக இந்நூல் வெளியிடப்படவுள்ளது.
 
மேலும் இந்நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி.க.கலாரஞ்சனி, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.கு.சுகுணன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். மற்றும் இந்நூலின் முதல்பிரதியினை மட்டக்களப்பு தமிழ்ச்சங்க பொருளாளர் தேசபந்து மு.செல்வராசா பெற்றுக்கொள்ளவுள்ளார்.
 
கதிரவன் த.இன்பராசா அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் உள்நாட்டு இறைவரித்திணைக்கள சிரேஸ்ட ஆணையாளர் சட்டத்தரணி மு. கணேசராசாவினால் வரவேற்புரையும், கலைக்கோகிலம் நாட்டியப்பள்ளியினால் வரவேற்பு நடனமும் இடம்பெறவுள்ளது. மேலும் தலைமையுரை, நூலாசிரியர் அறிமுகவுரையினைத் தொடர்ந்து நூல் வெளியீடு இடம்பெறவுள்ளது.

Related posts