ஓட்டமாவடி ஆற்றில் மிதந்து வரும் மிருகக் கழிவுகளும், குப்பை மூடைகளும்

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஓட்டமாவடி பகுதிக்கு அழகு சேர்க்கும் ஒன்றாக ஆற்றங்கரை காணப்படுகிறது. இவ்வாறு இயற்கை அழகு மிக்க இந்த ஆற்றங்கரையை சிலர் நாசப்படுத்திச் செல்கின்றமை மீனவர்களையும் ஆற்றோரம் வசிப்பவர்களையும் பாதிப்படையச் செய்கிறது.

இந்த ஆற்றில் யாருக்கும் தெரியாமல் சிலர் மிருகக் கழிவுகளையும் குப்பைகளையும் வீசிச் செல்வதால் ஆற்றை நம்பி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்கள், பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் போது, வலைகளிலும் தூண்டில்களிலும் மிருகக் கழிவுகளும் குப்பைகளும் சிக்கிக் கொள்வதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் அவர்களது பெறுமதியான வலைகள் சேதமடைகின்றன.

அத்துடன், ஆற்றில் தொட்டில்கள் அமைத்து மீன் வளர்ப்பு மேற்கொள்வதிலும் சிரமங்கள் ஏற்படுகின்றன. மீன் தொட்டில்களில் குப்பைகள் அகப்பட்டு தொட்டில்கள் சேதமடைகின்றன என்று மீனவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

குப்பைகளும், மிருகக் கழிவுகளும் இவ்வாறு ஆற்றில் வீசப்பட்டு கிடப்பதால் துர்நாற்றம் காரணமாக தாம் மிகவும் சிரமப்படுவதாக கரையோர மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறான சூழலில் தாம் சிறுவர்களையும், வயதானவர்களையும் வைத்துக் கொண்டு சுவாசிக்க சிரமப்படுகிறோம் என்று கரையோர மக்கள் மேலும் தங்களது கவலைகளை வெளிப்படுத்துகின்றனர்.

அத்துடன் தாம் உணவு உட்கொள்ளும் போது துர்நாற்றம் காரணமாக பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்குவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். எங்கள் வீடுகளுக்கு வரும் நபர்கள் கூட மூக்கைப் பொத்திக்கொண்டு தாமதிக்காமல் சென்றுவிடுகின்றனர் என்கின்றனர்.

இதனால் காலப்போக்கில் சுவாச நோய் உட்பட பல்வேறு நோய் தொற்றுக்கு உள்ளாகி விடுவோமோ என்று நாங்கள் அச்சப்படுகிறோம் என்று பாதிப்படைந்துள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த ஆற்றில் ஒவ்வொரு நாளும் மாடு, கோழி ஆகியவற்றின் கழிவுகள் மிதந்து வருகின்றன. அத்துடன் குப்பைகளும் மூடை மூடையாக மிதந்து வருகின்றன.

சிறுவர்கள் பயன்படுத்திய பம்பர்ஸ், பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்திய கோட்டக்ஸ் போன்ற அருவருப்பான பொருட்களை எல்லாம் இங்கு வீசிச் செல்கின்றனர் என்று கரையோர மக்கள் தெரிவிக்கின்றனர்.

தாம் வசிக்கும் சூழலை சுத்தமாக வைத்துக் கொள்வதற்காக வேண்டி பிறர் வசிக்கும் சூழலை இவ்வாறு நாசப்படுத்தி அசிங்கப்படுத்தும் நபர்கள் இறைவனை அஞ்சிக் கொள்ள வேண்டும். யாரும் பார்க்கவில்லை என்பதற்காக வேண்டி இவ்வாறான வேண்டத்தகாத செயல்களை் புரியக் கூடாது என்று தாம் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம் என்று இதனால் பாதிப்படைந்துள்ள மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

குறித்த ஆற்றங்கரைப் பகுதி பல வருடங்களுக்கு முன்னர் அழகிய முறையில் காணப்பட்டாலும் சில வருடங்களாக இது மிகவும் மோசமான முறையில் காட்சியளிக்கிறது என்று அனைவராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த ஆற்றில் பிளாஸ்டிக் பொருட்களுடன் இரசாயனம் கலந்த பொருட்களை வீசிச் செல்வதால் மீன்கள் உயிரிழந்து காணப்படுவதாகவும், இவ்வாறு அருவருப்பான பொருட்கள் வீசப்படுவதால் அவ் ஆற்றில் பிடிக்கும் மீன்களை மக்கள் விரும்பாத நிலை காணப்படுவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தமது வாழ்வாதாரம் பாதிப்படைவதாகவும் மீனவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இவ் அழகிய ஆற்றங்கரையை அழகுபடுத்தி அதனை பாதுகாக்க வேண்டிய பொறுப்புகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும். ஆற்றின் அணைக்கட்டுகளை முறையாக அமைத்து மண் அரிப்பை தடுத்து சேதமடைந்துள்ள அணைக்கட்டுகளை புனர்நிர்மாணம் செய்யப்பட வேண்டும் என்று பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அத்துடன் மீனவர்கள் தங்களுடைய மீன்பிடிப் படகுகளை தரித்து வைக்க சிரமப்படுகின்றனர். மீனவர்களாகிய தாம் தொடர்ந்தும் இவ் ஆற்றில் மீன்பிடி தொழில்களை செய்ய குப்பை கூளங்கள் இல்லாத இறங்கு துறைகளை அமைத்து தமது தொழில் நடவடிக்கைகளை தடையின்றி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதுமாத்திறமின்றி, குறித்த ஆற்றங்கரை பகுதியை சில நபர்கள் போதைவஸ்து பாவிக்கும் இடமாகவும் மாற்றி வருகின்றனர். இவ்வாறு போதைப்பொருள் பாவிக்கும் போத்தல்களை கரையோரம் எறிந்துவிட்டு செல்வதால் அவை உடைந்து மீனவர்களுக்கு காயங்களை ஏற்படுத்திய சம்பவங்களும் நடந்துள்ளன.

இத்தகைய கீழ்மைத்தனமான நடவடிக்கைகள் குறித்து, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளரின் கவனத்துக்கு கொண்டு வந்தபோது, “மக்களின் பாதுகாப்புக்காக வேண்டி மண்ணரிப்பை தடுக்க, அணைக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த பகுதியில் யாரும் குப்பைகள் போட வேண்டும் என்றும் காட்சிப் பலகையும் போடப்பட்டுள்ளது” என்றார்.

அத்துடன், குறித்த பகுதிகளில் ஒவ்வொரு நாளும் திண்மக் கழிவுகளை அகற்றும் இயந்திரங்கள் சேவையில் ஈடுபடுகின்றன. அதேபோன்று மாட்டு இறைச்சிக் கடை, கோழி இறைச்சிக் கடைகளின் கழிவுகளை முறையாக அகற்றுவதற்கு இயந்திரம் ஒன்றும் ஒவ்வொரு நாளும் சேவையில் ஈடுபடுகின்றது. இவ்வாறான வசதிகளை எமது பிரதேச சபை செய்து கொடுத்தும் அதனை சிலர் மீறிச் செயற்படுவது வேதனையளிக்கிறது என்றும் தவிசாளர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறான காரியங்களை செய்கின்ற நபர்கள் அதனை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் குறித்த செயல்களை செய்கின்ற நபர்கள் இனங்காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவிசாளர் தெரிவித்தார்.

சுற்றுச்சூழலையும் இயற்கை வளங்களையும் நேசிக்கும் ஏராளமான மக்கள் மத்தியில் இவ்வாறான நபர்களின் வேண்டத்தகாத செயல்கள் இயற்கை வளத்தை அழித்தொழிக்கும் நிகழ்வாகத்தான் பார்க்கப்படுகிறது.

இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறாமல் இவ் அழகிய ஆற்றங்கரையை அழகுபடுத்தி அதனை பொதுமக்கள் தங்களது பொழுதுபோக்கு இடமாக மாற்றியமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

Related posts