கடந்த நல்லாட்சி அரசாங்கமானது என்னை திட்டமிட்டு சிறைப்படுத்தியிருக்கின்றது. ஐந்து வருடங்கள் நான் சிறைவாசம் அனுபவித்துள்ளேன். இருந்தாலும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் என்னை அவர்களுக்குச் சேவை செய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்துள்ளார்கள் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த நாடாளுமன்ற அமர்வில் வந்து நான் கலந்து கொள்வதற்கும் பல தடங்கல்களும் தாமதங்களும் இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் அனுமதி கோர வேண்டும். இப்படி ஒரு சூழலில் என்னால் மக்களுக்கு சேவையாற்ற முடியாது.
எங்களுடைய நாட்டில் சமூக முரண்பாடுகள் நடந்து முடிந்திருக்கின்றது. நாம் இந்த சமூக முரண்பாடு, ஆயுத பேராட்டங்கள் காரணமாக 16 வயதிலே விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து போராடியவன்.
ஆனால் அந்த அமைப்பின் நோக்கங்கள் கொள்கைகள் பிழைத்ததன் காரணமாக அதிலிருந்து விலகி ஜனநாயக ரீதியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினை ஆரம்பித்து இன்று பல விடயங்களை செய்திருக்கின்றோம்.
இந்த நிலையில் இப்போது வட பகுதி மக்களும் தென்பகுதி மக்களும் இணைந்து பலமா ஒரு அரசாங்கத்தை அமைத்திருக்கின்றார்கள். இந்த அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் நான் ஒத்துழைப்பு வழங்குவேன்.