மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு-கல்முனை நவற்குடா பிரதான வீதியில் இன்று 23 வெள்ளிக்கிழமை பிற்பகல் வீதி வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடலை வண்டி மீது வீதியில் வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மேற்படி விபத்தினால் கடலை வண்டி தடம்புரண்டதுடன், கடலை வண்டியும்,அதிலிருந்த உணவுப் பொருட்களும் முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளதுடன், கடலை வண்டி மீது மோதிய மோட்டார் சைக்கிளும் சேதமாகியுள்ளது.
கடலை வண்டி மீது மோதிய மோட்டார் சைக்கிள் ஓட்டியவர் மது போதையில் இருந்ததாக விபத்து இடம்பெற்ற பகுதியிலிருந்த பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த விபத்து இடம்பெற்ற பகுதிக்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்துப் பிரிவு பொலிசார் கடலை வண்டி மீது மோதிய மோட்டார் சைக்கிள் ஓட்டிய நபரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளதுடன் ,விபத்துக்குள்ளான கடலை வண்டியையும், மோட்டார் சைக்கிளையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்துப் பிரிவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்படத்தக்கது.