: கட்சி முடிவுகளை மக்கள் மீது திணிக்காது மக்களின் கருத்துக்களை கட்சிநடைமுறைப்படுத்தும்…

கட்சி எடுக்கும் முடிவுகளை மக்கள் மீது திணிக்கும் அரசியலை மாற்றி மக்களின் கருத்துக்களை கட்சி நடைமுறைப்படுத்தும் அரசியல் கலாசாரத்தினை உருவாக்குதலே கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் நோக்கமாகும் என கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தலைவர் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் தெரிவித்தார்.
 
கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் செயற்பாடுகள் குறித்து இன்றைய தினம் (25) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 
 
கிழக்கில் செயற்படுகின்ற அனைத்துத் தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து ஓர் அணியாகப் பொதுச் சின்னத்தின் கீழ் தேர்தலில் போட்டியிட்டு தமிழர் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டின் அடிப்படையில் 2018 ஜனவரியில் கிழக்குத் தமிழர் ஒன்றியம் என்ற அமைப்பினை ஆரம்பித்து அதனூடாகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் அதன் அரசியல் அமைப்பான கிழக்குத் தமிழர் கூட்டமைப்பினை கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான என்னால் உருவாக்கப்பட்டது. பின்னர் கிழக்குத் தமிழர் ஒன்றியம் சட்டத்தரணி த. சிவநாதன் தலைமையில் ஓர் அரசசார்பற்ற நிறுவனமாக மண்முனை வடக்குப் பிரதேச செயலகத்தில் பதிவு செய்து கொண்டு இயங்க, அதற்குச் சமாந்தரமாகவும் சமகாலத்திலும் எனது தலைமையிலான கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு ஓர் அரசியல் கூட்டமைப்பாக அதன் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டுவந்தது. 
 
கிழக்குத் தமிழர் கூட்டமைப்பினை ஆரம்பிக்கும் செயற்பாட்டின் ஆரம்பமாக ஒவ்வொரு தமிழ்க் கட்சிகளுடனும் தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு அதனடிப்படையில் உடன்பாட்டுக்கு வந்த கட்சிகளை ஒன்றிணைத்து 2018 ஆகஸ்டில் களுவாஞ்சிக்குடியில் ஆரம்பக் கூட்டம் நடாத்தப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. இதன்படி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் அகில இலங்கை தமிழர் மகாசபை ஆகிய கட்சிகள் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு இறுதி வடிவம் கொடுத்து அதில் கைச்சாத்திடுவதற்கான கூட்டம் அதேவருடம் ஒக்டோபரில் கல்லடியில் இடம்பெற்றது. இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி ஆகியன இதனைத் தாமதப்படுத்தின. அதன் பின்னர் அகில இலங்கை தமிழர் மகாசபை மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியன இணைந்து கிழக்குத் தமிழர் கூட்டமைப்பினைத் தேர்தல் திணைக்களத்தில் ஓர் அரசியல் கூட்டமைப்பாகப் பதிவுசெய்யும் ஏற்பாடுகளை 2019 மார்ச்சில் முன்னேடுத்தன. தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்வதற்கான முயற்சிகள் இவ்விரு கட்சிகளாலும் மேற்கொள்ளப்பட்டாலும் ஏனைய கட்சிகளையும் இணைக்கும் முயற்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டே வந்தன.
 
இதன்படி 2019 செப்டெம்பர் பகுதியில் இதனை விரிவுபடுத்துவதற்கான கூட்டம் நடைபெற்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி கட்சி எடுக்கும் முடிவுகளை மக்கள் மீது திணிக்கும் அரசியலை மாற்றி மக்களின் கருத்துக்களை கட்சி நடைமுறைப்படுத்தும் அரசியல் கலாசாரத்தினை உருவாக்குதல். கிழக்கில் உள்ள பதிவு செய்யப்பட்டஃ பதிவு செய்யப்படாத கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் என்பவற்றை உள்ளடக்கிக் கூட்டுச் சனநாயகப் பொறிமுறையினை உருவாக்குதல், கிழக்குத் தமிழர் கூட்டமைப்புக்கு வெளியில் சமூக, பொருளாதாரா, அரசியல் ரீதியாக சுயாதீனமாகச் செயற்படும் வகையில் சனநாயகப் பணிக் குழுவினை ஏற்படுத்தல், சனநாயகப் பணிக்குழுவில் பெரும்பான்மை அடிப்படையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பினால் நடைமுறைப்படுத்;தப்படல் போன்ற தீர்மானங்களுடன் இக்குழுவின் பிரதம இணைப்பாளராக கலாநிதி சு.சிவரெத்தினம் அவர்கள் தெரிவு செய்யப்பட்டு கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் கூட்டுச் சனநாயகப் பணிக்குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.  இதன்படி இறுதிக் கட்டமாகக் கூட்டுச் சனநாயகப் பணிக்குழு என்ற கூட்டு அமைப்பினை அங்குரார்ப்பணம் செய்யும் கூட்டம் இவ்வருடம் ஜனவரி 05ல் மட்டக்களப்பில் இடம்பெற்றது. இக்குழுவிற்கான அங்கத்தவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
 
இதன்படி மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் தொகுதிகளின் அடிப்படையில் பட்டிருப்புத் தொகுதிக்கு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் திரு.ஞா.கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) அவர்களும், மட்டக்களப்புத் தொகுதிக்கு மாநகரசபை உறுப்பினர் ந.திலிப்குமார் அவர்களும், கல்குடா தொகுதிக்கு ஈரோஸ் அமைப்பின் முக்கியஸ்தர் பே.வரதராஜன் அவர்களும் இணைப்பாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். இதன்படி இக் கட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் அடுத்த கட்டமாக அம்பாறை திருகோணமலை மாவட்டங்களில் இதற்கான கட்டமைப்பினை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
 
கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் கூட்டுச் சனநாயகப் பணிக்குழுவின் கட்டமைப்புகள் மேற்கூறியவாறு நிறைவுபெற்றதும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
 
 
 
 
 
Attachments area
 

Related posts