மலையக மாணவர்களிடையே கணித பாடத்தில் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்கு “அனைவருக்கும் கணிதம்” என்ற புதிய வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
தேசிய ரீதியில் ஒப்பிடுகையில் மலையக மாணவர்களின் கணித பாடத்திற்கான அடைவு மட்டம் குறைவாகக் காணப்படுவதாக இராஜாங்க கல்வி அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதனால் ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள மாணவர்களுக்கு “அனைவருக்கும் கணிதம்” என்ற திட்டத்தை அமுல்படுத்த உள்ளதாகவும் இராஜாங்க கல்வி அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
இந்த திட்டம் தொடர்பில் அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தையும் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் 127 பாடசாலைகள் அடையாளங்காணப்பட்டுள்ளன.
கணித பாடத்தில் குறைந்தபட்ச சித்தி எய்துவதற்கு மாணவர்களை ஊக்கப்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்காக அமைந்துள்ளது.
இந்த நிலையில், ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உயர்தர வகுப்புகளுக்கு கணித, விஞ்ஞான பாடங்களை கற்பிப்பதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனினும், வளப்பற்றாக்குறை காரணமாக உயர் தரத்திற்கான கணித , விஞ்ஞான பாடங்களை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
அதற்கமைய, கணித, விஞ்ஞான பாடங்களுக்கான ஆசிரியர்களை இந்தியாவிலிருந்து வரவழைக்கவுள்ளதாக இராஜாங்க கல்வி அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
எனினும், ஆசிரியர்களை இந்தியாவிலிருந்து வவைழைப்பது தொடர்பான கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணனின் முயற்சி தோல்வியடைந்தது.