முன்னாள் விவசாய அமைச்சரின் முயற்சிக்குக் கிடைத்த பலன்… கரடியனாறு விவசாயப் பயிற்சி நிலையத்திற்கு ஜனாதிபதியினால் முதற்கட்டமாக 25 மில்லியன் ஒதுக்கீடு…
கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரின் பாரிய முயற்சியின் பலனாக புதிதாக நிர்மானிக்கப்பட்ட கரடியனாறு விவசாய சேவைக்காலப் பயிற்சி நிலைய கட்டிடத் தொகுதி கடந்த 2017.08.31ம் திகதி அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இதன் போது முன்னாள் அமைச்சர் துரைராசசிங்கம் அவர்களால் இப்பயிற்சி நிலையத்தின் அபிவிருத்திக்காக இன்னும் 89 மில்லியன்கள் தேவைப்படுவதாக விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க ஜனாதிபதியினால் இந்நிதி கட்டம் கட்டமாக ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், இச் சேவைக்காலப் பயிற்சி நிலையத்தை கண்ணொருவ ஆராய்ச்சி நிலையம் போன்று ஆக்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகவும் உறுதிமொழியளிக்கப்பட்டது.
அதற்கிணங்க ஜனாதிபதி அவர்களினால் முதற்கட்டமாக 25 மில்லியன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மாவட்ட அரசாங்க அதிபரினுடாக அமுலாக்கம் செய்வதற்காக ஜனாதிபதி செயலகத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட மாற்றத்தினூடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மாகாண ஆட்சியில் பங்காளிகளாக உள்ளீர்க்கப்பட்டு விவசாய அமைச்சுப் பொறுப்பினையும் பெற்றது. இதன் படி கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராசசிங்கம் அவர்களின் ஆட்சிக் காலம் முடிந்த பின்னரும் அவர் மேற்கொண்ட விடாமுயற்சியின் பலனாக இச்செயற்பாடு இடம்பெற்று பூரணப்படுத்தப்பட்டுள்ளது. தனது பதவிக்காலம் முடிந்த பின்னரும் அவரது செயற்பாடுகள் தொடர்வதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு என்பது குறிப்பிடத்தக்கது.