பதினொரு தமிழ் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபரான முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட விவகாரத்தையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கவனத்திற்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
உயர்நீதிமன்ற செலவீனத்திற்கான ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
குறித்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”இலங்கையின் நீதித்துறை சுயாதீனமானது எனவும், போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகள் தேவையில்லை என்றும் ஆளும் மற்றும் எதிர் தரப்பினர் குறிப்பிட்டார்.
ஆனால் இலங்கையை பொருத்தவரை உள்நாட்டு நீதித்துறை சுயாதீனமானதல்ல என நான் அப்போதே தெரிவித்திருந்தேன். அது தற்போது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தின் பிரதான சந்தேகநபரான வசந்த கரன்னாகொட விவகாரத்தில் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அது யுத்த காலம் என்பதால் அவர் எந்த கொலையையும் செய்திருக்கலாம் என அவரது சட்டத்தரணி வெளிப்படையாக கூறியுள்ளார். அவ்வாறு இருந்தும் அவரது மேன்முறையீட்டு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர் கைது செய்யப்படுவதிலிருந்து நீதிமன்றம் அவரை பாதுகாத்துள்ளது.
இதிலிருந்து சட்டத்துறை பக்கசார்பானது என்பது தெளிவாகியுள்ளது. தமிழ் இளைஞர்களுக்கு இக்கதி எனின், விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புபட்டிருந்தால் அவர்களுக்கு என்ன கதியாக இருக்கும்?
ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் பிரேரணையில் சர்வதேச நீதிபதிகளின் பங்கேற்புடன் விசாரணைகள் நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டும்” என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.