கலாநிதி ரோலண்ட் சில்வா சுவரோவிய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் கௌரவ பிரதமரினால் திறந்து வைப்பு

மத்திய கலாசார நிதியத்தின் நிறுவுனர் கலாநிதி ரோலண்ட் சில்வா அவர்களது நினைவாக நிர்மாணிக்கப்பட்ட தம்புள்ள கலாநிதி ரோலண்ட் சில்வா சுவரோவிய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் கௌரவ பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் (2020.12.20) திறந்து வைக்கப்பட்டது.
 
இது இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள முதலாவது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சுவரோவிய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மற்றும் தகவல் மையமாகும்.
 
மத்திய கலாசார நிதியத்தினால் 100 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மையமானது இலங்கையின் புராதன சுவரோவியங்களை பிரதி செய்து பாதுகாக்கும் அறிவியல் ஆய்வுகூடமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
 
கலாநிதி ரோலண்ட் சில்வா அவர்கள், இலங்கையின் தொல்பொருள் வரலாற்றில் புதிய அத்தியாயம் படைத்து யுனெஸ்கோவின் வழிகாட்டலில் கலாசார முக்கோண திட்டத்தை நிறுவுவதற்கு முன்னோடியாக திகழ்ந்த முதல் பணிப்பாளர் நாயகமும் நிறுவுனரும் ஆவார்.
 
கலாசார முக்கோண திட்டம் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்தே தொல்பொருள் மற்றும் வாஸ்து விஞ்ஞானம் ஆகிய துறைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டது. இலங்கையின் தொல்பொருள் நினைவிடங்களை உலக புகழ்பெற்ற பாரம்பரிய தளங்களாக ஊக்குவிப்பது வெளிநாட்டு சுற்றுலாவின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது. அதன் ஊடான நிதி திரட்டும் செயல்முறை மூலம் நினைவுச்சின்னம் பராமரிப்பு மற்றும் பாரம்பரிய நிர்வாகத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்தது.
 
இத்தகைய உன்னதமான எண்ணக்கருக்களை செயற்படுத்திய கலாநிதி ரோலண்ட் சில்வா அவர்களது நினைவாக ரங்கிரி தம்புளு விகாரையை அண்மித்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு மையத்தின் ஊடாக வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்து நவீன காலங்கள் வரை இலங்கையில் வரையப்பட்ட ஓவியங்களை நகலெடுத்தல், பாதுகாத்தல், பராமரித்தல் மற்றும் விஞ்ஞான ரீதியாக சேமித்து வைத்தல் என்பன முன்னெடுக்கப்படும்.
 
உள்ளூர் மற்றும் வெளிநாட்டில் பிறந்த கலைஞர்கள், பாதுகாவலர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்காக இந்த மையம் நிறுவப்பட்டுள்ளமை இலங்கைக்கு ஒரு பாரிய சாதனையாகும்.
 
இந்த மையத்தினுள் விரிவுரை அரங்குகள், கேட்போர் கூட வசதிகள், டிஜிட்டல் காப்பகம், இரு பரிமாண மற்றும் முப்பரிமாண காப்பகம், அவசரகால சுவரோவிய பாதுகாப்பு சிகிச்சை பிரிவு மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கான குடியிருப்பு மற்றும் பிற வசதிகள் என்பன காணப்படுகின்றன.
 
சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கு அமைய,  தொல்பொருள் மற்றும் கலாசார மறுமலர்ச்சிக்காக செயற்படுத்தப்படும் வேலைத்திட்டத்தில் மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் மத்திய கலாசார நிதியம் முன்னணி பங்களிப்பு வகிக்கிறது.
 
குறித்த சந்தர்ப்பத்தில் ரங்கிரி தம்புளு ரஜ மஹா விகாராதிபதி உடுகம மஹ்கள தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினர் பங்கேற்றனர்.மஹாசங்கத்தினருடன் கௌரவ அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், கௌரவ இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான நாலக கோட்டேகொட, பிரமித பண்டார தென்னகோன், கலாநிதி சுரேன் ராகவன், ரோஹன குமார திசாநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே, தம்புள்ள மேயர் ஜாதிய ஓபான, புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் காமினி அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts