இலங்கையின் கலை இலக்கியத் துறைகளுக்கு அளப்பரிய பங்காற்றுகின்ற கலைஞர்கள், இலக்கியவாதிகள், விற்பன்னர்களுக்கு வருடந்தோறும் அரசின் உயர் விருதான கலாபூஷணம் விருது வழங்கப்படுகின்றது.
இவ்விருது வழங்கல் தொடர்பான செயற்பாடுகளை வருடந்தோறும் கலாசார அமைச்சின் கீழ் இயங்குகின்ற கலாசார அலுவல்கள் திணைக்களம் மேற்கொள்கின்றது. இவ்வைபவத்தின் போது சிங்களம், தமிழ், முஸ்லிம் ஆகிய மூவினக் கலைஞர்களும் உள்ளடக்கப்படுகின்றார்கள்.
தமிழ்க் கலைஞர்களைத் தெரிவுசெய்யும் பொறுப்பு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு உரியதாகும். அறுபது வயதிற்கு மேற்பட்ட கலைஞர்கள் மட்டுமே இவ்விருதினைப் பெறுவதற்கான தகைமையுடையவர்களாவர். சிற்பம், ஓவியம், நடனம், வாய்ப்பாட்டு, தவில், நாதஸ்வரம், நாடகம், சினிமா, நாட்டுப்புறவியல், இலக்கியம், நாட்டுக்கூத்து, ஊடகத்துறை போன்ற பல்வேறு துறைகளில் மிகவும் சிறப்புறச் சேவையாற்றியவர்கள் விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
2019ஆம் ஆண்டுக்கான கலாபூஷண விருதுக்கு தகைமையுடைய தமிழ்க் கலைஞர்கள் தமது விண்ணப்பங்களை பிரதேச, மாவட்டச் செயலகங்களில் பணிபுரியும் எமது திணைக்கள கலாசார உத்தியோகத்தர்களிடம் இருந்தும், திணைக்களத்திலும் பெற்றுக்கொள்ளலாம். மேலும், இந்த விண்ணப்பப் படிவங்கள் www.hindudept.gov.lk என்ற திணைக்கள இணையதள முகவரியிலிருந்தும் தரவிறக்கம் செய்துகொள்ளமுடியும்.
பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களோடு கலைஞர்கள் தமது தகுதியை உணர்த்தும் முழுமையான ஆவணங்களைப் பிரதேச செயலகம் மற்றும் மாவட்டச் செயலகங்களில் எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதிக்கு முன் சமர்ப்பித்தல் வேண்டும்.