காரைதீவு விபுலாநந்த வீதியை கார்ப்பட் வீதியாக்க கற்கள் பரவி இருவாரகாலமாகியும் இன்னும் அடுத்தகட்ட வேலைகள் ஆரம்பமாகவில்லை. இதனால் குறி;த்த வீதியால் மக்கள் பயணிக்கமுடியாத அவலநிலை எழுந்துள்ளது. கற்கள் உரமிடப்படாமல் தாறுமாறாக கிளம்பி கிடப்பதால் வாகனங்களின் டயர்கள் பஞ்சராகின்றன. மக்கள் வேறுவீதியை பயன்படுத்த வேண்டிய துர்ப்பாக்கியநிலை எழுந்துள்ளது.
கல்பரவி இருவாரங்களாகியும் அடுத்தகட்ட வீதி அமைப்பு வேலைகள் தாமதமாவது ஏன்? மக்களிடம் எந்தக்கலந்தாலோசனை இல்லாமலும் இந்த வீதி செப்பனிடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதனைவிட ஏலவே இருந்த கொங்கிறீட்வீதி நல்லது என என மக்கள் கூறுகின்றனர்.
இவ்வலநிலை தொடர்பில் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேசசபைத்தவிசாளரிடம் கேட்டபோது இதுபற்றி மேலதிகவிபரம் தெரியாது என்று கைவிரித்தனர்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் இவ்வீதியை செப்பனிடுவதாகக்கூறப்படுகிறது. விபுலாநந்த வீதிக்கென 500மீற்றர் வீதி கார்ப்பட் இடுவதற்கு நிதி வந்ததாகவும் ஆனால் தற்போது 350மீற்றர் நீள வீதிக்கான முதற்கட்டவேலையே இடம்பெற்றுள்ளது. மீதி 150மீற்றர் நீள வீதியை அதே விபுலாநந்த வீதியில் போடப்படவேண்டும் என அவ்வீதியில் வாழும் பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஏலவே காரைதீவு பிரதானவீதியமைப்பிலும் இதே தரப்பினர் ஒருவழிப்பாதை இருவழிப்பாதை எனமாறிமாறி போட்டு வீதியை சீரில்லாமல் வைத்திருப்பதாக பாதசாரிகளும் வாகனஓட்டுநர்களும் முறையிடுகின்றனர். இது தொடர்பாக காரைதீவு பிரதேசசபைத் தவிசாளரும் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் முறையிட்டுள்ளதாக தெரிகிறது.