கல்முனையில் கோழியிறைச்சிக்கு நிர்ணய விலை;சுத்தம், சுகாதாரம் பேணாத கடைகள் இழுத்து மூடப்படும்

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட அனைத்து கோழி இறைச்சிக் கடைகளிலும் நிர்ணய விலையில் புரொய்லர் கோழியிறைச்சியை விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
கோழி இறைச்சிக் கடைகளின் உரிமையாளர்களுடனான விசேட கலந்துரையாடல்  செவ்வாய்க்கிழமை (02) மாலை, மாநகர முதல்வர் செயலகத்தில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே இத்தீர்மானம் ஏகமனதாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
கல்முனை மாநகர சபைப் பிரதேசங்களில் கோழி இறைச்சியானது வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதனால் சில வியாபாரிகளும் நுகர்வோரும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் கோழி இறைச்சி வியாபாரிகளிடையே முரண்பாடுகளும் தோன்றுகின்றன. இவ்விடயம் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, அவரது ஆலோசனை, அறிவுறுத்தல்களின் பிரகாரம் புரொய்லர் கோழியிறைச்சிக்கு நிர்ணய விலையைத் தீர்மானித்து, நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
 
ஒவ்வொரு நாளும் இவ்விலையைத் தீர்மானிப்பதற்காக கோழி விற்பனை வர்த்தகர்களிடையே ஐவர் கொண்ட  விலை நிர்ணயக் குழுவொன்றும் தெரிவு செய்யப்பட்டது. இக்குழுவினால் நாளாந்தம் தீர்மானிக்கப்படுகின்ற நிர்ணய விலை, மாநகர சபை ஊடாக அறிவிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்துவது எனவும் அவ்விலையிலேயே அனைவரும் புரொய்லர் கோழியிறைச்சியை விற்பனை செய்வது எனவும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொடக்கம் இதனை அமுல்படுத்துவது எனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
அதேவேளை, அனைத்து கோழி இறைச்சிக் கடைகளிலும் கண்டிப்பாக சுத்தம், சுகாதாரம் பேணப்பட வேண்டும் எனவும் அவை உதாசீனம் செய்யப்படும்போது சம்மந்தப்பட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன்போது அறிவுறுத்தப்பட்டது.
 
கோழி இறைச்சிக் கடைகளின் கழிவுகளை முகாமைத்துவம் செய்வது தொடர்பிலும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டதுடன் அவற்றை சேகரித்து, அகற்றுவதற்காக மாநகர சபையினால் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பிரத்தியேக கழிவகற்றல் வாகனத்திலேயே அவற்றை ஒப்படைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
 
மேற்படி விடயங்கள் உட்பட கோழியிறைச்சிக் கடைகளுக்கான விதிமுறைகளை மீறுவோரின் வியாபார அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படுவதுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
 
இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட சில முறைப்பாடுகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டு, ஆராயப்பட்டன. அத்துடன் மாநகர சபையின் அனுமதி பெறாமல் சிலர் கோழியிறைச்சிக் கடைகளை நடத்துவதாக சுட்டிக்காப்பட்டப்பட்டதுடன் அவர்களது விபரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. இதையடுத்து, சம்மந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநகர முதல்வர், அதிகாரிகளைப் பணித்தார்.

Related posts