நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையை தள்ளு வண்டிகளில் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாளை புதன்கிழமை (16) தொடக்கம் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளதால், சமயலறைக் கழிவுகளில் துர்நாற்றம் வீசக்கூடிய குப்பைகளை மாத்திரம் இத்தள்ளு வண்டிகளில் ஒப்படைத்து, முழுமையாக ஒத்துழைப்பு வழங்குமாறு பொது மக்களிடம் கல்முனை மாநகர சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாட்டில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பெருந்தொற்று அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியிலும், அதனால் ஏற்பட்ட வருமானம் இழப்பு, நிதிப்பற்றாக்குறை போன்ற பல்வேறு சவால்கள், நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கல்முனை மாநகர சபையானது, மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களின் ஆலோசனை, வழிகாட்டலில், சுகாதாரப் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் அர்ப்பணிப்பு, தியாகத்துடன் கூடிய பணியாற்றல் காரணமாக தனது திண்மக்கழிவகற்றல் சேவையை தொய்வின்றி மிகவும் சிறப்பாக முன்னெடுத்து வந்திருக்கிறது.
அவ்வாறே அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கல்முனை மாநகர சபையும் தனது வாகனங்களுக்கான எரிபொருட்களை கொள்வனவு செய்வதில் இடர்பாடுகளை எதிர்கொண்டிருந்த போதிலும் கல்முனை மாநகர சபையானது இருபதுக்கு மேற்பட்ட திண்மக்கழிவகற்றல் வாகனங்கள் மூலம் கழிவகற்றல் சேவையை திருப்திகரமாக முன்னெடுத்து வந்துள்ளது.
எனினும் கடந்த சில நாட்களாக மாநகர சபையின் இவ்வாகனங்களுக்குத் தேவையானளவு டீசலைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், அவசர மாற்று ஏற்பாடாக இன்று 16ஆம் திகதி தொடக்கம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட 06 வலயங்களிலும் 24 தள்ளு வண்டிகளைக் கொண்டு, சமயலறைக் கழிவுகளை, அதிலும் துர்நாற்றம் ஏற்படக்கூடிய கழிவுகளை மாத்திரம் சேகரித்து, அகற்றுவதற்கு மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.
இதன்படி உக்கும் கழிவுகளாயினும் உக்காத கழிவுகளாயினும் துர்நாற்றம் ஏற்படாத குப்பைகள் அனைத்தையும் மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் வாகனங்கள் வழமை போன்று சேவையில் ஈடுபடுத்தப்படும் வரை பொது மக்கள் தமது வீடுகளிலேயே வைத்து, முகாமை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
இந்த மாற்று ஏற்பாட்டின் ஊடாக மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே குப்பைகளை சேகரித்து அகற்ற முடியுமாக இருக்கும். இதனால் பெருமளவு குப்பைகள் தேக்கமடையும். அவற்றை டீசல் விநியோகம் வழமை நிலைக்கு திரும்பிய பின்னர் மாநகர சபையின் திண்மக் கழிவகற்றல் வாகனங்கள் மூலம் சேகரித்து, அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, நாட்டின் இன்றைய இக்கட்டான சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, கல்முனை மாநகர சபையின் இந்த மாற்று ஏற்பாட்டுக்கு மாநகர வாழ் பொது மக்கள் அனைவரும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என மாநகர சபை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.