கல்முனை பிராந்தியத்திலுள்ள சில பிரதேசங்கள் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வாரங்களில் ஏற்பட்ட தொற்று அதிகரிப்பு வீதத்தை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
கல்முனை தெற்கு, சாய்ந்தமருது, அக்கரைப்பற்று, காரைதீவு ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளே கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார வேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜி.சுகுணன் தெரிவித்தார்.
நேற்று 24ஆம் திகதி வரையான கடந்த இரு வார காலப்பகுதியில் கல்முனை தெற்கு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 11 பேரும் சாய்ந்தமருது சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 10 பேரும் அக்கரைப்பற்று சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 14 பேரும், காரைதீவு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 12 பேரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இப்பிரதேசங்களில் மொத்தமாக முறையே 339 பேர், 97 பேர், 339 பேர், 88 பேர் என்ற அடிப்படையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
மேற்படி அபாய வலயங்களில் நாளாந்தம் கொரோனாத் தொற்றாளர்களின் வீதம் அதிகரித்து வருவதால் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் சுகாதார நடைடுறைகளை மிகவும் இறுக்கமாக கடைப் பிடிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை கல்முனை பிராந்திய சுகாதார வேவைகள் பணிமனைப் பிரிவிலுள்ள 13 சுகாதாரப் பிரிவுகளிலும் இதுவரை 1,378 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்கானப்பட்டுள்ளனர். இப்பிராந்தியத்தில் 27,579 பேருக்கு பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.