தமிழ் தலைமை எமது சகோதர இனத்திற்கு எந்தளவுக்கு விட்டுக் கொடுக்க முடியுமோ அந்தளவுக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய அனைத்தையும் கண்ணை மூடிக் கொண்டே விட்டுக் கொடுத்திருக்கின்றது. ஆனால் சகோதர இன அரசியல்வாதிகள் தங்கள் சாணக்கியத்தால் எம்மவர்களையே பயன்படுத்தி அவர்களுக்குத் தேவையானவற்றைப் பெற்றுக் கொள்கிறார்கள்.கேவலம் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்துவதற்கு எமது தலைமை முட்டுக் கொடுக்கும் அரசியல்வாதிகள் இடம் கொடுக்கவில்லையென்றால் எமது தலைமை போல் கீழ்த்தரமான அரசியல் செய்பவர்கள் யாரும் இல்லை என கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் தலைவரும், சட்டத்தரணியுமான த.சிவநாதன் தெரிவித்தார்.
கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை(25)இடம்பெற்ற சமகால அரசியல் நிலைமை தொடர்பிலான ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள் ஒற்றுமைப்பட்டாலே போதும் காரியங்கள் தானாக நடக்கும் என்று எமது தமிழத் தேசியத்தின் தலைவர் சம்பந்தன் ஐயா தெரிவித்துள்ளார்.தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். தமிழர்களின் அரசியல் தற்போது எந்த நிலையில் இருக்கின்றது என்பதை யாவரும் அறிவர்.
தமிழ் மக்கள் ஒன்றுபடுவது மட்டுமல்லாது தமிழர்கள் மத்தியில் இருக்கக் கூடிய அரசியற் கட்சிகள் அனைத்தையும் ஒன்றுபடுத்துவதும் காலத்தின் தேவை. ஏனெனில் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக் கூடிய கட்சிகள் பிளவுபட்டு தனித்தனியாக தேர்தலைச் சந்திப்பதன் ஊடாக இழப்புக்களைத் தான் சந்திக்க முடியுமே தவிர எதனையும் சாதிக்க முடியாது.
தமிழ் மக்களையும் அரசியற் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் பணியை யார் முன்னனெடுப்பது என்ற கேள்வி எழுந்த வேளையில் தான் கிழக்குத் தமிழர் ஒன்றியம் தானாக எமது சிந்தனையில் தோற்றம் பெற்றது. இதற்கு எந்தப் பின்னணியும் இல்லை. தவறான புரிதல்கள் கூடாது. காலத்தின் தேவை கருதி இந்தக் கிழக்குத் தமிழர் ஒன்றியம் உருவாக்கப்பட்டதே தவிர நேரடியாகத் தேர்தல் அரசியலில் ஈடுபடுவதற்காக உருவாக்கப்பட்டதல்ல.
எமது தமிழ் மக்களும் தமிழ் அரசியற் கட்சிகளும் ஒன்றிணைந்து இலங்கை அரசியலில் ஒரு பலமான சக்தியாகத் திகழ வேண்டும். எமது தமிழரின் பலமும் இன ஒன்றுமையுமே கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் தார்மீக மந்திரமாகும்.தற்போது எமது தமிழ் அரசியல் மிகவும் பலவீனமடைந்துள்ளது. இலங்கையில் இருக்கின்ற ஏனைய இனங்கள் தற்போது இருக்கின்ற அரசியல் நிலைமையும், அதிகார நிலைமையும் வைத்துப் பார்க்கின்ற போது அவர்கள் அடைந்திருக்கக் கூடிய முன்னேற்றத்துடன் ஒப்பிடும் போது எங்களுடைய தமிழ் மக்கள் அதிலும் குறிப்பாக கிழக்கு வாழ் தமிழ் மக்கள் அடைந்தது பூச்சியமாகத் தான் இருக்கும்.
எங்களுக்கு எமது தமிழ் தலைமைகள் மீது பெரும் நம்பிக்கை இருந்தது. தற்போது அரசியலில் தீர்மானிக்கக் கூடிய மாபெரும் சக்தியாக எமது தமிழ் தலைமை தற்போது திகழ்கிறது. தமிழர்களின் அரசியல் இல்லாமல் இலங்கையில் அரசாங்கம் நடத்த முடியாது என்கின்ற அளவுக்கு சக்தி வாய்ந்ததாக எமது தமிழர் அரசியல் உள்ளது. ஆனால் துரதிஸ்டவசமாக அந்த அரசியலை முன்னெடுக்கும் எமது தமிழ்த் தலைமைகள் எமது மக்கள் நலன்சார்ந்து சிந்திப்பதற்குத் தவறிவிட்டார்கள்.ஆனால் அவர்களுக்கு இருக்கக் கூடிய அதிகாரங்களைப் பயன்படுத்தி ஏனைய அரசியல்வாதிகள் எவ்வாறு காய்நகர்த்துகின்றார்களோ அவ்வாறு காய்நகர்த்தல்களை மேற்கொண்டிருந்தால் இன்றைக்கு எமது தமிழ் இனம் இழந்தவற்றில் சிலவற்றையாவது சீர்செய்திருக்க முடியும். ஆனால் அதனை அவர்கள் செய்யவில்லை. இந்தளவு அதிகாரத்தில் இருந்து கொண்டு எமது தமிழ் மக்களுக்கான விடயங்களைச் செய்யவில்லை ஏன் என்பதற்கான பதிலை அவர்கள் தான் கூற வேண்டும்.
தாங்கள் வெறுமனே கை உயர்த்துபவர்களாக மாத்திரமே இருக்கின்றோம். காரியங்கள் செய்வதற்கு எங்களுக்கு முடியாமல் இருக்கின்றது என எமது தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பிர்கள் பலர் கூறுகின்றார்கள். நாங்கள் அவர்களிடம் கேட்பது ஒன்றுதான் காரியங்கள் செய்ய முடியாவிட்டால் நீங்கள் ஏன் கைகளை உயர்த்துகின்றீர்கள்.
அமைச்சர் றிசாட் அவர்களுக்கு எதிராகக் கொண்டு வந்திருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை அரசாங்கத்தைக் கவிழ்க்கும் இன்னுமொரு முயற்சி இதற்கு நாங்கள் இடம்கொடுக்க முடியாது என்றும் அன்மையில் எமது மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியிருந்தார். இந்த அரசாங்கத்தைத் தூக்கிப் பிடிப்பதற்கு நீங்கள் ஆளுங்கட்சியா? அல்லது நீங்கள் அரசாங்கமா? இந்த அரசாங்கம் கவிழ்வதால் தமிழ் மக்களுக்கு என்ன இழப்பு? எனக் கேட்கின்றேன். அல்லது நீங்கள் ஐந்து வருடங்கள் பாராளுமன்ற உறப்பினராக இருந்தால் தான் ஓய்வூதியம் பெற முடியும் என்பதற்காகவா இந்த அரசாங்கம் மீது இத்தனை அக்கறை?
இதே றிசாட் அமைச்சர் தங்களின் எத்தனையோ முயற்சிகளைத் தடுத்து வருகின்றார் என எத்தனை பத்திரிகை அறிக்கைகள் விட்டிருக்கின்றீர்கள். அவ்வாறான ஒருவரை தொடர்ந்து பதவியில் வைத்திருக்க வேண்டும் என்று ஏன் விரும்பகின்றீர்கள். ஒரு ஆட்சி கவிழ்ந்தால் இன்னமொரு ஆட்சி வரும். இதுவரை வந்த ஆட்சி அனைத்தும் தமிழர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்றே சொல்லுகின்றீர்கள். அவ்வாறு இருக்க ஆட்சி கவிழ்ந்து விடும் என்று கவலைப்படுவது ஏன்?
எமது தமிழ் தலைமை எமது சகோதர இனத்திற்கு எந்தளவுக்கு விட்டுக் கொடுக்க முடியோ அந்தளவு விட்டுக் கொடுக்க வேண்டிய அனைத்தையும் கண்ணை மூடிக் கொண்டே விட்டுக் கொடுத்திருக்கின்றது. தனியான கல்வி வலயம், தனி பிரதேச செயலகங்கள் என சகல விடயங்களுக்கும் விட்டுக் கொடுத்தீர்கள். ஆனால் எமது கல்முனை தமிழ் மக்களின் நிர்வாகத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இயங்கும் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்துவதற்கு நீங்கள் முட்டுக் கொடுக்கும் அரசியல்வாதிகள் இடம் கொடுக்கவில்லையென்றால் உங்களைப் போல் கீழ்த்தரமான அரசியல் செய்பவர்கள் யாரும் இல்லை.
இனிமேலும் உங்களைத் தமிழ்மக்கள் நம்ப வேண்டுமா? இந்தத் தமிழ்ப் பிரதேச செயலகம் தரமுயர்த்துவதற்காக எவ்வளவு போராடினீர்கள். ஆனால் எதாவது கைகூடியதா? ஆனால் எமது சகோதர இன அரசியல்வாதிகள் தங்கள் சாணக்கியத்தால் இலகுவாகக் காய்களை நகர்த்தி உங்களையே பயன்படுத்தி அவர்களுக்குத் தேவையானவற்றைப் பெற்றுக் கொண்டார்கள். தமிழரின் அரசியல் எங்கிருக்கினறது. எமது சகோதர இனத்தின் அரசியல் எப்படி இருக்கின்றது.
எனவே தற்போது தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்ற அரசியல் மாற்றப்பட வேண்டும். மக்களுக்கான அரசியல் ஸ்தாபிக்கப்பட வேண்டும். மக்களுக்கான அரசியல் இருந்தால் தான் எமது தமிழ் மக்களின் நலன்களைப் பாதுகாக்க முடியும் என்று தெரிவித்தார்.