கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது சுயேட்சைக் குழு சார்பான புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.மௌபியா, தனது சத்தியப்பிரமாண பத்திரத்தை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீபிடம் கையளித்து, உறுப்பினர் பதவியை பொறுப்பேற்றுக் கொள்வதையும் டார்.
மாநகர முதல்வர் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகர சபையின் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், மாநகர சபை உறுப்பினர்களான ஹென்றி மகேந்திரன், ரி.ராஜரட்ணம், மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷாத் காரியப்பர், சபைச் செயலாளர் ஏ.எம்.ஆரிப் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
இவரது சத்தியப்பிரமாணப் பத்திரத்தை கையேற்றுக் கொண்ட மாநகர முதல்வர், இவரை இம்மாதத்திற்கான பொதுச் சபை அமர்வுக்கு அழைப்பு விடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சபைச் செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் சார்பான சுயேட்சைக் குழுவின் 19ஆம் வட்டார உறுப்பினராக பதவி வகித்து வந்த முஹர்ரம் பஸ்மீர், கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அப்பதவி ஒரு வருட காலமாக வெற்றிடமாக இருந்து வந்த நிலையில், குறித்த சுயேட்சைக் குழுவின் மேலதிக பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த மேற்படி எஸ்.மௌபியா, இச்சுயேட்சைக் குழுவின் பரிந்துரைக்கமைவாக தேர்தல்கள் திணைக்களத்தின் கல்முனை மாநகர சபைக்கான தெரிவத்தாட்சி அதிகாரியினால் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.