கல்முனை மாநகர சபை எல்லையினுள் மீன் விற்பனையில் ஈடுபடுவோரும் வாடிகளை நடத்துவோரும் மாநகர சபையில் தம்மைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்படுகிறது.
1956ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க உள்ளூராட்சி அதிகார சபைகள் நியமத்துணை விதிகள் சட்டத்தின் பாகம் 21 மற்றும் 56 இன் கீழ் கல்முனை மாநகர சபை எல்லையினுள் மீன் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தும் பொருட்டு, மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இப்பதிவு நடவடிக்கையை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் சந்தை அல்லது ஏதாவது ஓரிடத்தில் மீன் வியாபாரம் செய்பவர்களும் வீதிகளில் நடமாடும் மீன் விற்பனையாளர்களும் மீன் வாடிகளை நடத்துவோரும் எதிர்வரும் 2021-09-15ஆம் திகதிக்கு முன்னர் மாநகர சபையில் தம்மைப் பதிவு செய்து, அனுமதிப் பத்திரம் மற்றும் அடையாள அட்டை என்பவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும்.
அத்துடன் மேற்படி நியமத்துணை விதிகளில் கூறப்பட்டவாறு மீன் வியாபாரிகள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
மாநகர பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், வருமானப் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் இதனை மேற்பார்வை செய்து, அவ்வப்போது உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள்.
மாநகர சபையின் அனுமதி பெறாதவர்களும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோரும் மாநகர சபை எல்லையினுள் மீன் வியாபாரத்தில் ஈடுபடவோ, வாடிகளை நடத்தவோ முடியாது என அறிவுறுத்தப்படுகின்றனர்.
இதனை மீறிச் செயற்படுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்முனை மாநகர சபை மேலும் அறிவித்துள்ளது.